வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (19/06/2018)

கடைசி தொடர்பு:10:30 (19/06/2018)

தமிழக அரசுப் பேருந்தில் இந்தி பெயர்ப் பலகை..! - சமூக வலைதளங்களில் குவிந்த கண்டனங்கள்

அரசுப் பேருந்து

ஈரோட்டில் இயங்கிவரும் அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப் பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் இயங்கிவரும் 17-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப்பலகையில், ‘பெருந்துறை மார்க்கெட்’ என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழகப் பேருந்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதா?’ என பலரும் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பேருந்து

கடந்த இரண்டு நாள்களாகவே, இந்தியில் எழுதப்பட்ட இந்தப் பெயர்ப் பலகையைக் கண்டித்த பதிவுகள் ஈரோடு மாவட்டத்தில் வைரலாகி வருகின்றன. ‘தமிழ்நாட்டில் ஓடும் பேருந்தில் எதற்காக இந்தி? வடநாட்டில் வாழும் தமிழர்களுக்காக எங்கும் பெயர்ப்பலகை தமிழில் வைக்கப்படுவதில்லை’ என்றும் ‘ரயில் பயணச் சீட்டில் ஊர் பெயரை தமிழில் அச்சிடும் முறையையே நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெற்றிருக்கிறோம். தமிழகப் பேருந்தில் இந்தியில் எழுதப்படுவதை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் போனால் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இத்தகைய இந்தித் திணிப்பு பரவலாகும் அபாயம் இருக்கிறது’ என பலரும் எச்சரித்து தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ‘தற்போதைய மத்திய அரசாங்கமானது ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்கிற ரீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியை தமிழகப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திணிக்க ஆளும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ’ என்று பலரும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்தி

பெருந்துறை பேருந்தில் இந்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏன் என போக்குவரத்து வட்டாரங்களில் விசாரித்தோம். “சமூக வலைதளங்களில் பரவி வரும் பெயர்ப் பலகைகொண்ட அந்தப் பேருந்தானது பெருந்துறை சிப்காட் பகுதியிலிருந்து பெருந்துறை மார்க்கெட் பகுதிக்குச் சென்று வருகிறது. சிப்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருவதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கவே இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக ஞாயிறுதோறும் பெருந்துறையில் வாரச் சந்தை நடக்கும். அந்தச் சந்தைக்கு சிப்காட்டைச் சுற்றியுள்ள வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து காய்கறி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் செல்வார்கள். மற்றபடி அந்தப் பேருந்தில் இந்தி மட்டுமல்ல தமிழும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரத்துக்குப் பிறகு அந்த இந்திப் பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டுவிட்டது” என்றனர்.

பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வட மாநிலத்தவர்கள் குடியேறியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பணிக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வட மாநில மக்களுக்காக, டெங்கு விழிப்பு உணர்வு அறிவுறுத்தலை இந்தி மொழியில் ஆடியோவாகப் பதிவுசெய்து ஆட்டோவில் ஒளிபரப்பியிருக்கின்றனர்.