பி.ஜே.பியும் அ.தி.மு.க-வும் நாட்டை ஆளும் தகுதியை இழந்துவிட்டன..! உ.வாசுகி ஆவேசம்

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடிக்கும், இதுவரை தூத்துக்குடிக்கு வருகை தராத முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது. நாட்டை ஆளும் தகுதியை பி.ஜே.பியும் அ.தி.மு.க-வும் இழந்துவிட்டது” என சி.பி.எம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம் சாட்டி உள்ளார்.  

பிருந்தா காரத்

துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் சி.பி.எம் கட்சியின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதலில் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், “இங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்களைப்  பட்டியலிட்டால் அதில் முதல் குற்றவாளி மோடிதான். இதற்கு அ.தி.மு.க அரசு பா.ஜ.க-வுக்கு ஒத்துப் போகிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக உள்ளது பா.ஜ.க அரசு. 

100 நாள்களாக நடைபெற்ற கிராம மக்களின் போராட்டத்தில் அவர்களிடம் எம்.எல்.ஏ, அமைச்சர்கள், ஆட்சியர் என ஒருவருமே நேரில்  சந்திக்கவில்லையே ஏன்? கடந்த 22-ம் தேதி பெண்கள், முதியவர்கள் என கைக்குழந்தைகளைத் தூக்கி வந்தார்கள் சாப்பாடு கூட கட்டிக் கொண்டு வந்தார்கள்.  அந்தச் சூழலைப் புரிந்துகொள்ளாமல்  தாக்குதலை நடத்தியுள்ளது காவல்துறை. அனைத்தும் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட குறிவைக்கப்பட்டத் தாக்குதல்தான். மோடியின் பாதையை மாநில ஆளும் அரசு பின்பற்றி வருகிறது என சுருக்கமாக பேசி முடித்தார். 

,vasugi

இரண்டாவதாக பேசிய மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, ``இரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து ஆண்களைக் கைது செய்யும் காவல்துறையினருக்கு தைரியம்இருந்தால் வேதாந்தாவின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டுக் கதவைத் தட்டமுடியுமா? அதானிக்கும் அம்பானிக்கும் அகர்வாலுக்கும் ஒரு சட்டம்.   ஏழை அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டமா? பறவைகள் பலவித குணாதிசயம்கொண்டது என்பதுபோல, போராடும் மக்களிடம் பயங்கர போலீஸாகவும், எஸ்.வி.சேகரைப் பார்த்தால் சிரிப்பு போலீஸாகவும், ஆளுநரையும் அனில் அகர்வாலையும் பார்த்தால் பயந்த போலீஸாகவும், மல்லையாவையும் நீரவ்மோடியையும் பார்த்தால் காணாமல் போய்விட்ட போலீஸாகவும் உள்ளது. 

இப்படி நிறத்துக்கும், ரகத்துக்கும் ஒன்றாக செயல்பட்டு தன் ஆளுமையைக் காட்டுகிறது காவல்துறை. குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பார்கள். அதேபோல, அமைச்சர் கடம்பூர் ராஜூ, துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸை அனுப்பி மக்களின் மனநிலையை ஆழம் பார்த்த பிறகு, ஆழம் அதிகம் எனத் தெரிந்துதான் முதல்வர் எடப்பாடியார் தூத்துக்குடிக்கு வரவில்லை.

இந்த துயரச் சம்பவம் குறித்து ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடிக்கும், இதுவரை தூத்துக்குடிக்கு வருகை தராத முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆட்சி செய்ய என்ன தகுதி இருக்கிறது. நாட்டை ஆளும் தகுதியை பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் இழந்துவிட்டன. இவர்கள் இருவரும் மனிதர்களே அல்ல” என விளாசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!