வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (19/06/2018)

கடைசி தொடர்பு:10:00 (19/06/2018)

`அ.தி.மு.க-வுக்கு இனி எதிரிகளே கிடையாது' - சிவகாசியில் அதிர்ந்த ராஜேந்திர பாலாஜி!

`தி.மு.க, தங்கள் குடும்ப நலனுக்காக ஆட்சி செய்தது. அ.தி.மு.க மட்டும்தான் மக்கள் நலனுக்காக ஆட்சி செய்கிறது. அரசியலில் அ.தி.மு.க-வுக்கு இனி எதிரிகளே கிடையாது' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது,  ``காவிரி நீரைப் பெற்றுத்தர இதுவரை தி.மு.க எந்த நல்ல விஷயத்தையும் செய்ததில்லை. ஆனால், அ.தி.மு.க அரசுதான் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. சிறப்பாகச் செயல்படும் தமிழக அரசின் திட்டங்களை மறைக்கவே எதிர்க்கட்சியினர் ஸ்டெர்லைட், காவிரிப் பிரச்னை எனப் பல போராட்டங்களைத் தூண்டி விடுகிறார்கள். தி.மு.க ஆட்சி எப்போதும் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆட்சியாக இருக்கும். அ.தி.மு.க ஆட்சியோ மக்களின் நலனைப் பற்றி எப்போதும் சிந்திக்கும் ஆட்சியாகும். பாலாறு, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு உட்பட தமிழக மக்களின் நலனில் தி.மு.க தொடர்ந்து துரோகம் செய்துள்ளது. இன்றைய அரசியலில் அ.தி.மு.க-வுக்கு எதிரிகளே கிடையாது" என்று ஆவேசமாகப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க