தண்ணீரைச் சுத்தமாக்க இனி ஆர்.ஓ தேவையில்லை.. முருங்கை இலை இருந்தாலே போதும்..!

உலகளவில் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 210 கோடி. பல்வேறு காரணங்களால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. சுத்தமான தண்ணீர் கிடைப்பதே அரிதானதாக இருக்கிறது. இதனால் தண்ணீரை சுத்திகரித்துப் பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது. தண்ணீரைச் சுத்திகரிக்க சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலமாகப் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. வீடுகளில் ஆர்.ஓ மூலமாகத் தண்ணீரை சுத்திகரித்துப் பயன்படுத்துகிறோம். இதன் மூலமாகப் சுத்திகரிக்கும் தண்ணீரில் மெக்னீசியம் சத்து அழிக்கப்பட்டு விடுகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள். ஆக, சுத்தமான ஆரோக்கியமான தண்ணீர் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

முருங்கை இலை

இந்நிலையில், முருங்கை விதை மற்றும் இலையில் இருந்து எடுக்கப்படும் புரதங்களைக் கொண்டு தண்ணீரை சுத்திகரிக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் ரசாயனங்கள் மற்றும் மின்சாரம் இல்லாமல் தண்ணீரை சுத்திகரிக்க முடியும் என்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில், தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படும் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் கீரை, காய், பூ ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். ஆராய்ச்சியின் முடிவில் முருங்கைக் கீரை மற்றும் விதையில் இருந்து எடுக்கப்படும் காரிஜிக் ஆண்டிமைக்ரோபியல் புரதங்கள் நீரைச் சுத்திகரிக்கும் திறன் உள்ளவை எனக் கண்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக 'எப் சான்ட்' என்ற பொருளை உருவாக்கியுள்ளனர்.

ஒரு தொட்டியில் மணலைப் பரப்பி அதன் மேல் சிலிக்கான் துகள்களைக் கொட்டி, முருங்கையில் இருந்து எடுக்கப்படும் 'காரிஜிக் ஆண்டிமைக்ரோபியல்' புரதங்களைப் பரவலாக வைப்பதே எப் சான்ட் ஆகும். மிகவும் குறைந்த செலவில் நீரைச் சுத்திகரிக்க இந்த முறை உதவுவதைச் செயல்முறைகள் மூலமாக உறுதிசெய்துள்ளனர்.

எப் சான்ட் வழியாகத் தண்ணீரை செலுத்தும்போது பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. தேவையில்லாத பொருள்கள் வடிகட்டப்படுகின்றன. சத்துகள் அழிக்கப்படுவதில்லை. இதன் மூலமாகத் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் நீண்ட நாள்களுக்குக் கெடுவதில்லை என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சி முடிவு சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!