கொள்ளையர்கள் செய்த தந்திர வேலை - அதிர்ச்சியில் மேலாளர்

கொள்ளை


சென்னையில் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த டிவி, ஜன்னல், அலமாரிகள் ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், ஜகஜீவன்ராம்நகர், முதலாவது அவென்யூவில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் பிரபாகர். இவர், பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். இவரின் மனைவி கல்பனா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். கடந்த வெள்ளிக்கிழமை,  குடும்பத்துடன் பிரபாகர், கொடைக்கானலுக்குச் சென்றார். இன்று அதிகாலை 4 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது எல்.இ.டி- டிவி, ஜன்னல், அலமாரிகள் ஆகியவற்றின் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. மேலும் பூஜை அறையிலிருந்த வெள்ளிப் பொருள்கள், 1000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இதையடுத்து, பிரபாகர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கொள்ளையர்களின் கைரேகைகளையும் நிபுணர்கள் பதிவு செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிரபாகரின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால்தான் டி.வி மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பிறகு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் தங்களை அடையாளம் கண்டுப்பிடித்துவிடக் கூடாது என்பதற்காக அதன் இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால், கொள்ளையர்கள் யார் என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைரேகை மூலம் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், அந்தத் தெருவில் உள்ள மற்ற சிசிடிவி. கேமராவில் கொள்ளையர்களின் முகங்கள் பதிவாகியுள்ளதா என்றும் விசாரித்துவருகிறோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,`` பிரபல சிலைக்கடத்தல் மன்னன் ஒருவரின் வீட்டில்தான் பிரபாகர் மாதம் 36,000 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். வசதியாக வாழும் அவர், வீட்டில் நகை, பணம் என எதையும் வைத்திருப்பதில்லை. நகைகளை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். இதனால்தான் அவை தப்பிவிட்டன"  என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!