ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது! திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

``ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்'' எனப் பொதுக்கூட்டத்தில் பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் வனத்துறை அமைச்சர் சீனிவாசன்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அ.தி.மு.க சார்பில் காவிரி மீட்புப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் என்ற கனவில் இருந்த ஸ்டாலின், ஜெயலலிதா இறந்த பிறகு தினகரனோடு சேர்ந்து திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருந்தார். ஆட்சியமைக்க இருபது எம்.எல்.ஏ-க்கள் தேவை. அதற்கு உடனடியாக 18 எம்.எல்.ஏ-க்களை வைத்து கவர்னர்கிட்ட போய் மனு கொடுக்குறாங்க. யாரு, தினகரன். தினகரன் யாரு. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு துரோகி. இந்தக் கட்சியிலேயே இருக்கக் கூடாது என நீக்கி வைக்கப்பட்ட ஆளு. இன்றுவரை அந்தாளை கட்சியில சேக்கலை. அந்தத் துரோகியோடு ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்ட 18 பேர் பின்னால போயிருக்காங்கன்னு சொன்னா, அவங்க சாப்பிடுவது சோறுதானா? அல்லது வேறு ஏதாவது திங்கிறாங்களா?

எங்களை மாதிரியானவங்களை எப்படி ஜெயலலிதா தன்னோட வேர்வையை சிந்தி, ரத்தத்தை சிந்தி, பணத்தை செலவழித்து எம்.எல்.ஏ ஆக்குனாங்களோ அதே மாதிரிதான் நன்றிகெட்ட அந்தப் பதினெட்டு பேரையும் எம்.எல்.ஏ ஆக்குனாங்க. ஜெயலலிதாவைவிட சிறந்த தலைவனா இருந்தா அவரது தொண்டன்னு சொல்லிக்கிறதுல எங்களுக்குப் பெருமை. ஆனா, ஜெயலலிதாவால் கேடி, ரவுடி என்று ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரனோடு 18 பேர் போயிட்டு, இன்னிக்கு மகாத்மா காந்தி, புத்தரைப் போல் பேசுகிறார்கள் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுதுன்னு சொன்னா கேட்பவனுக்கு எங்க போச்சு அறிவுன்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி இருக்கு. என்னமோ பெருசா தியாகம் செஞ்சவங்க மாதிரியும், இவங்கனாலதான் கட்சி வளர்ந்த மாதிரியும், இவங்கனாலதான் ஆட்சி நடக்குற மாதிரியும் 18 பேர் போனா நாசமா போயிடுவோம்ங்கிற மாதிரியும் பேசிக்கிட்டு திரியறாங்க.
|
கவர்னர்கிட்ட போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை நீக்க வேண்டும் என்று சொன்னதற்குப் பிறகு, உண்மையிலேயே அரசியல் சட்டப்படி, அரசியல் சாணக்கியப்படி(!) சபாநாயகர் ஒரு தலைமையை ஏற்று அவரை முதலமைச்சர் ஆக்கிய பிறகு, பதினெட்டு பேர் மனுக்கொடுக்குறாங்க. சபாநாயகர் முறைப்படி அவங்களுக்கு அவகாசம் கொடுத்தாரு. அந்த அவகாசத்தைப் பெற்று அதன் பிறகும் வராமல் அவங்க பாட்டுக்கு மைசூர், அமெரிக்கான்னு ஜாலியா சுத்திட்டு இருந்தாங்க. ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கிக்கொண்டு,  நீங்க தயவு செஞ்சு ஒன்னு தெரிஞ்சுக்கணும். இந்தச் சூழ்நிலையில இங்க இருக்குற பத்திரிகையாளர்கள் நம்முடைய பொதுமக்கள் நினைச்சுப் பார்க்க வேண்டும். இந்த பதினெட்டு பேரும் ஸ்டாலினோடு போயிட்டா அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் தினகரன். மத்தவங்கள்லாம் மந்திரின்னு அவங்களா ஒரு கற்பனை நாடகத்தை நடத்திகிட்டு இருந்தா நாங்கள்லாம் பாத்துகிட்டு சும்மா இருந்திட முடியுமா? எனவே, சட்டப்படி பதினெட்டு பேரை சபாநாயகர் நீக்கியிருக்கிறார். அரசியல் ஆண்மை இருந்தால் வழக்குல வெற்றி பெற்று வாங்க. தலைமை நீதிபதி பதினெட்டு எம்.எல்.ஏ-க்களை நீக்கிய சபாநாயகர் உத்தரவு செல்லும் என சொல்லியிருக்கிறார்கள். அருள்கூர்ந்து நீங்க புரிந்துகொள்ள வேண்டும். இன்னொரு நீதிபதி செல்லாதுன்னு சொல்றாரு. இருக்கட்டும் மூன்றாவது நீதிபதி என்ன சொல்றாருன்னு கேட்டுக்கலாம்.

அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு பண்ணலாம். அதுக்கு 3 வருஷம், 4 வருஷம்கூட ஆகட்டுமே. ஆனால், அதற்குள் தங்க தமிழ்ச்செல்வன் என்ற எம்.எல்.ஏ நான் ராஜினாமா செய்வேன். இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னால், உங்களை லட்டுபோல மறுபடியும் எம்.எல்.ஏ.வா எடுத்து வெச்சா நல்ல ஆட்சின்னு சொல்லுவீங்க. சட்டப்படி சபாநாயகர் எடுத்த முடிவு சரியில்லைன்னு சொன்னா என்னத்துக்கு நீ போற? நீ போறதுக்கு என்ன அர்த்தம்? ராஜினாமா செய்றேன்னு சொன்னா, சபாநாயகர் தீர்ப்பை ஒத்துக்கொள்கிறேன்னு அர்த்தம். இதுகூட யாருக்கும் தெரியாதா? இந்த 8 மாதத்தில் தலைவனாக தூக்கி வைக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தினகரனால்  தூக்கி எறியப்பட்டிருக்கிறார். வெற்றிச்செல்வன் போன்ற எம்.எல்.ஏ-க்கள் எவனும் போறதுல்ல வர்றதில்லை. நாடகம் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும். எல்லோரையும் அடிமையைப் போல் தினகரன் நடத்தியதால்தான் வெந்து நொந்துப்போய் தங்க தமிழ்ச்செல்வன் எனக்கு வேணவே வேணாம் இந்த எம்.எல்.ஏ பதவின்னு தூக்கிப்போட்டு ஓடப்பாக்குறார்’’ என பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!