வேல்முருகனை வெளியே விடுவார்களா? - பழைய கேஸ்களைத் தூசுதட்டும் போலீஸ்! | will velmurugan get bail?

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (19/06/2018)

கடைசி தொடர்பு:14:40 (19/06/2018)

வேல்முருகனை வெளியே விடுவார்களா? - பழைய கேஸ்களைத் தூசுதட்டும் போலீஸ்!

மே 25-ம் தேதி வேல்முருகன் சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வேல்முருகனை வெளியே விடுவார்களா? - பழைய கேஸ்களைத் தூசுதட்டும் போலீஸ்!

சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியது ஆகிய இரண்டு வழக்குகளிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் 18-06-2018 அன்று உத்தரவிட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டத்தில், கடந்த ஏப்ரல் 1 ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர். அதேபோல் கடந்த ஏப்ரல் 10 ம் தேதி நெய்வேலி அனல்மின் நிலையத்தில், முற்றுகைப் போராட்டம் செய்தனர். இந்தநிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், படுகாயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் அளிப்பதற்காக மே 25 ம் தேதி வேல்முருகன் சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில், கைது செய்யப்பட்ட வேல்முருகன் சென்னைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை மோசமான காரணத்தால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நெய்வேலி போராட்டத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மற்றுமொரு வழக்கு வேல்முருகன் மீது பாய்ந்தது. எனவே, மீண்டும் சென்னைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளிலிருந்தும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மற்றும் கடலூர் நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றங்கள் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தன. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 18-06-2018 அன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி `கன்னியாகுமரி மாவட்ட கோட்டார் காவல் நிலையத்தில், தினமும் காலை 10.30 மணிக்குக் கையெழுத்து இடவேண்டும்' என்ற நிபந்தனையுடன் வேல்முருகனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். 

வேல்முருகன்

எனினும், உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை விழுப்புரம் மற்றும் கடலூர் நீதிமன்றங்களில் காட்டி அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதியை சென்னைப் புழல் சிறையில் காட்டியபிறகு வேல்முருகன் நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்படுவார். இதற்கு இன்னும் ஓரிரு நாள்கள் தேவைப்படும். இந்தச் சட்ட நடைமுறையை நிறைவேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஜெயிலில் இருக்கும் வேல்முருகனின் உடல்நிலை மோசமாக இருப்பதால், ஜாமீனில் வெளியே வந்தவுடன் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உடல்நிலையைச் சீர்செய்வதற்கு அவரது கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். எனவே, வேல்முருகன் ஜாமீனில் வெளியே வந்தவுடன் முழு உடல் பரிசோதனை செய்து அவரை சில மாதங்கள் ஓய்வில் இருக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தாலும் வேல்முருகன்மீது ஏற்கெனவே இருக்கும் முந்தைய வழக்குகளை போலீஸார் தூசி தட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. அதாவது இலங்கைத் தமிழர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரிப் பிரச்னை, நீட் பிரச்னை, மோடிக்குக் கருப்புக் கொடி காட்டியது... போன்ற பிரச்னைகளையும், வேல்முருகன் கைதுக்குப் பிறகு நடந்த சம்பவங்களையும் கணக்கெடுத்து அவரைத் தொடர்ந்து ஜெயிலிலேயே அடைத்துவைக்கும் திரைமறைவு முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.


டிரெண்டிங் @ விகடன்