`தமிழகத்தில் ஆட்சியாளர்களே ஆர்டர்லியாக இருக்கிறார்கள்' - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸைத் தாக்கும் ராமதாஸ்!

தமிழகத்தில் ஆட்சியாளர்களே ஆர்டர்லியாகத் தானே இருக்கிறார்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ராமதாஸ்

கேரள மாநிலத்தில் பட்டாலியன் ஏ.டி.ஜி.பி-யாக இருப்பவர், சுதீஷ் குமார். இவரின் வீட்டில் காவலரான கவாஸ்கர் என்பவர்  `ஆர்டர்லி’ ஆகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி இவர் ஏ.டி.ஜி.பி-யின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மற்றும் மகளைத் திருவனந்தபுரத்தில் உள்ள நேப்பியார் மியூசியம் வளாகத்தில் உள்ள மைதானத்தில் காலையில் நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் நடைப்பயிற்சிக்குச் சென்ற நிலையில், வாகனத்தின் உள்ளேயே செல்போனை வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். திரும்பி வந்தபோது டிரைவர் கவாஸ்கர், வாகனத்தைச் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வெளியில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏ.டி.ஜி.பி-யின் மகள் தாக்கியதில் டிரைவர் கவாஸ்கரின் கழுத்து, முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரும் சர்ச்சையை இச்சம்பவம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. 

இதுதொடர்பாக பதில் அளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், காவல்துறையில் இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு `ஆர்டர்லி' வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோரை மறைமுகமாகத் தாக்கும் விதமாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், ``கேரளாவில் ஒரு காவலர் தாக்கப்பட்டதால் ஆர்டர்லி முறையிலிருந்து அனைவருக்கும் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் முன்பே ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதாக அறிவித்தாலும்கூட ஆட்சியாளர்களே ஆர்டர்லியாகத் தானே இருக்கிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்துப் பதிவிட்ட ராமதாஸ்,  ``திண்டுக்கல் சீனிவாசன் கூறியது உளறல் அல்ல. உண்மை. நீண்டநாள்களாக மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் உண்மையாக வெளிவரும்" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!