வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (19/06/2018)

கடைசி தொடர்பு:15:01 (19/06/2018)

`சி.டி.இ.டி தேர்வு விண்ணப்பப் பதிவு ஒத்திவைப்பு' - சி.பி.எஸ்.இ திடீர் அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. 

 சிபிஎஸ்இ  விண்ணப்பதிவு

மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சிபெற வேண்டும். சி.டி.இ.டி தேர்வில் மொழித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. 

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு வரை தமிழ் மொழி உட்பட 20 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தி, சம்ஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்று செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல் சர்ச்சையைக் கிளப்பியது. 

இதையடுத்து, நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `சி.டி.இ.டி தேர்வு குறித்து வெளியான தகவல் உண்மையில்லை. தமிழ் உட்பட 20 மொழிகளில் தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்'. 

இந்நிலையில், சி.டி.இ.டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 22-ம் தேதியில் தொடங்க இருந்த நிலையில், விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. அதில், `நிர்வாக காரணங்களுக்காக சி.டி.இ.டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.