``நாங்கள் ஏழைகள்... எனவே, ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை" - அமைச்சர் தங்கமணி

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம், விமானநிலையம் அருகில் உள்ள வயர்லெஸ் சாலையில் நேற்று நடந்தது. திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.பி-யுமான ப. குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெல்லமண்டி நடராஜன், எஸ். வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.கே. பாலசுப்ரமணியன், நல்லுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் தங்கமணி

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, ``காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் செய்தது தி.மு.க-தான். காவிரி நடுவர் மன்றம் என்ற வார்த்தையை முதன்முதலில் அறிவித்தது எம்.ஜி.ஆர். மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது அ.தி.மு.க.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் தற்போது அமைக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழுவின் அதிகாரம் டெல்லியில் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேறியுள்ளது. அந்த ஆணையத்திற்கான தமிழக உறுப்பினர்களையும் நியமித்துள்ளோம். கர்நாடக அரசின் சார்பில் உறுப்பினர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அ.தி.மு.க-தான்.

மக்களை திசை திருப்புவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, இப்போது நடைபயணம் மேற்கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் காவிரி பிரச்னைக்காக எந்தக் குரலும் கொடுக்கவில்லை.

அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என ஸ்டாலின் கூறுகிறார். அப்படி, அவர் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். தமிழக மக்களை பொறுத்தவரை, மாநிலத்தில் தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று மக்கள் கூறி வருகிறார்கள். 

அதிமுக பொதுக்கூட்டம்

ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். டி.டி.வி. தினகரனை நம்பிச் சென்றவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அடுத்து வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் ஜெயலலிதாவைச் சுற்றி இருந்துகொண்டு அனைத்தையும் சுருட்டிக்கொண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைச் சிக்க வைத்துவிட்டார்கள். அதுவே அவரின் உயிருக்கு ஆபத்தாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்களைச் சந்திக்க விடவில்லை. பலமுறை கேட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை உள்ளேயே விடவில்லை சரி.. நாங்கள் ஏழைகள். ஆனால், பக்கத்து மாநில முதல்வர்கள், தலைவர்கள் எனப் பலரும் வந்தார்களே அவர்களை அனுமதித்திருக்கலாம். அப்படி அனுமதித்திருந்தால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை தெரிந்திருக்கும். அவரின் உடலை இன்னும் ஒருநாள் மக்கள் பார்வைக்கு வைத்திருக்கலாம். எல்லாம் மர்மமாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக டி.டி.வி. தினகரன் இருந்தபோது, காவிரி உரிமை பற்றி ஒருவார்த்தை பேசியிருப்பாரா, இல்லை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இங்கேயும் உருப்படியாக எதுவும் பேசுவதில்லை. டெல்டா மாவட்டத்தில் பிறந்து தமிழகத்துக்குத் துரோகம் விளைவித்தவர் அவர். ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த தினகரன், தற்போது `நான்தான் அ.தி.மு.க' என்று சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், இந்த இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டாலும் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணைந்து, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!