வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (19/06/2018)

கடைசி தொடர்பு:15:36 (19/06/2018)

8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதி திடீர் கைது!

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழல் செயற்பாட்டாளர் வளர்மதியைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

வளர்மதி

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நேற்று சேலம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. மஞ்சவாடி கனவாய், அடிமலைப்புதூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் போன்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

அடிமலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 11 பேர் தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு `8 வழிச் சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது' என்று நில அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் குவிப்பையடுத்து விவசாயிகள் யாரிடமும் பேசுவதற்கே அச்சப்பட்டதையடுத்து 8 வழிச் சாலைக்கான எல்லைக் கல் விரைந்து போடப்பட்டது.

இந்த நிலையில் ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்துக்கு சூழல் செயற்பாட்டாளர் வளர்மதி இன்று வந்தார். அப்போது, கிராம மக்களைச் சந்தித்து பேசிய அவர், பசுமைச் சாலை அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் வளர்மதியைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, அவரைக் கைது செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்தனர். பின்னர், பொதுமக்களிடமிருந்து வளர்மதியைப் பிடித்து இழுத்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அவரைக் காவல்துறையினர் எங்கு கொண்டு சென்றனர் என்று தெரியவில்லை.