`அளவின்றி விளம்பரம் செய்ய வேண்டாம்’ - தொண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்த தி.மு.க!

கட்சி நிகழ்ச்சிகளுக்கு அளவின்றி விளம்பரம் செய்ய வேண்டாம் எனத் தொண்டர்களுக்கு தி.மு.க தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அண்ணா அறிவாலயம்

சமீபத்தில் சென்னையில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈகா தியேட்டர் - கோயம்பேடு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும் சேதப்படுத்தியும் கட்- அவுட்களும் கொடிக் கம்பங்களும் நடப்பட்டன. இதைப் புகைப்படமாக எடுத்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. போதாக்குறைக்கு, ``நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது'' எனப் பதிவிட்டது. இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப் பரவ தி.மு.க-வுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.

உடனடியாக இதைப்பார்த்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, சேதங்களை உடனடியாகச் சரி செய்ய உத்தரவிட்டார். அதன்படி தி.மு.க தொண்டர்கள் அதைச் சரி செய்தனர். சரி செய்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ஜெ.அன்பழகன், ``சேதமடைந்த இடங்களை எங்கள் குழுவினர் வெற்றிகரமாகச் சரி செய்துவிட்டனர். எந்த ஒரு பகுதியும் சரிசெய்யப்படாமல் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற தவறு இனி நடைபெறாது என்பதுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார். 

திமுக விளம்பரம்

இதற்கிடையே, விளம்பரங்களில் செய்வதில் தொண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்து திமுக தலைமை கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குப் பேனர்கள், கட்அவுட்கள் போன்ற விளம்பரங்கள் செய்து பொது மக்களுக்கும்,  வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்றும், பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தக் கூடாதென்றும் கழகச் செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்திலேயே அறிவுறுத்தி இருந்தார். இதத் தொண்டர்கள் கடைப்பிடித்தாலும், ஒரு சிலர் ஆர்வக்கோளாறின் காரணமாக இதனை கடைப்பிடிக்கவில்லை. 

இது அண்ணாநகர் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் வாயிலாகத் தெரிய வருகிறது. இதை அறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து, பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடனடியாகப்  பழுது பார்த்து முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களும் அப்பணிகளைச் செய்து முடித்து உள்ளனர். முன்பு கூறியவாறே நிகழ்ச்சிகள் குறித்து அளவின்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம். ஓரிரு இடங்களில் விளம்பரம் செய்தாலே போதுமானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!