வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (19/06/2018)

`எதிர்காலம் இருளும் முன்பாக ஏதாவது செய்வோம்’ - 8 வழிச்சாலை பற்றி சுப.உதயகுமாரன்!

சேலம் மக்களின் எதிர்காலம் இருள்வதற்கு முன்பாக ஏதாவது செய்வோம் என்று 8 வழிச் சாலை குறித்து சுப.உதயகுமாரன் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

சேலம் மக்களின் எதிர்காலம் இருள்வதற்கு முன்பாக ஏதாவது செய்வோம் என்று 8 வழிச் சாலை குறித்து சுப.உதயகுமாரன் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

சுப உதயகுமாரன்

பொதுமக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் அகற்றி அழித்து விட்டு, சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். இதற்கு, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சேலம்-சென்னை எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் பேசினாலே கைது செய்வோம், சிறை வைப்போம் எனும் எடப்பாடி அரசின் பாசிச அணுகுமுறையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பாசிச அணுகுமுறையைத்தான் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குமரி சரக்குப் பெட்டகத் துறைமுகத் திட்டத்தில் கடைபிடிக்கிறார். 

கார்ப்பரேட் வளர்ச்சித் திட்டங்கள் இனி இப்படித்தான் அமல்படுத்தப்படும். அடுத்த தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலேயே ஆட்சி அமைந்தால், நிலைமை இன்னும் மிக மோசமாகும். ரூ.10,000 கோடி சாலை, ரூ.20,000 கோடி துறைமுகம் என்றால் சாதாரண விசயங்களா என்ன? பத்து விழுக்காடு அடித்தால்கூட, கற்பனை செய்ய முடியாத காசு கிடைக்கிறதே. அதனால் அரசியல்வாதிகளே, அதிகாரிகளே, பெரு நிறுவனங்களே, உங்களுக்கு வேண்டும் மட்டும் எங்கள் பணத்தைத் திருடிக் கொள்ளுங்கள். ஆனால், எங்கள் நிலத்தை, நீரை, கடலை, காற்றை, மலைகளை, மரங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் பெருவாழ்வு வாழ, எங்கள் வாழ்வைச் சிதறடிக்காதீர்கள். 

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், இயக்கத் தோழர்களும் சேலம் போவோம். அங்கே என்ன நடக்கிறது? என்று உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்போம். மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றச் சொல்வோம். சிலர் கொள்ளை அடிக்க எங்கள் மக்கள் அழிவதா? என்று கேட்போம். எதிர்காலம் முற்றிலும் இருளும் முன்னால், ஏதாவது செய்வோம்’’ என சுப.உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.