கூட்டணியை முறித்தது பா.ஜ.க! இரண்டு ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தது மெஹபூபா ஆட்சி!

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அம்மாநில பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவித்துள்ளார். இதனால், காஷ்மீரில் நடந்து வரும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மெஹபூபா

காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து வெற்றிபெற்றது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்  முஃப்தி முகமது சயீத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மரணம் அடைந்ததை அடுத்து, கடந்த  2016-ம் ஆண்டு  மெஹபூபா முஃப்தி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மெஹபூபா முஃப்தி அரசுக்கு, அளித்த ஆதரவைத் திரும்ப பெறுவதாகப் பா.ஜ.க இன்று திடீரென அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காஷ்மீர் மாநிலப் பா.ஜ.க பொறுப்பாளர் ராம் மாதவ், `காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், காஷ்மீரில் அண்மைக்காலமாகப் பயங்கரவாதம், பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியைப் பா.ஜ.க வாபஸ் பெறுகிறது' என்று கூறினார்.

87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28, பா.ஜ.க-வுக்கு 25 மற்றும் தேசிய மாநாடு கட்சிக்கு 15 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ-க்களில் ஆதரவு தேவை. பா.ஜ.க அளித்த ஆதரவைத் திரும்ப பெற்றதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சியுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, முதல்வர் பதவியை மெஹபூபா முஃப்தி ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!