இரண்டு கட்சிகளுக்கு குறி வைக்கும் திவாகரன்! | Dhivakaran to appoint party functionaries soon

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (19/06/2018)

கடைசி தொடர்பு:16:03 (19/06/2018)

இரண்டு கட்சிகளுக்கு குறி வைக்கும் திவாகரன்!

திவாகரன்

சமீபத்தில் புதிய கட்சியைத் தொடங்கிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் பிஸியாக இருந்துவருகிறார். 

கடந்த 10-ம் தேதி சசிகலாவின் சகோதரர் திவாகரன், `அண்ணா திராவிடர் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சிக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில், விரைவில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது, திவாகரனின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

கட்சிப்பணியில் ஈடுபட திவாகரனுக்கு நெருக்கமான மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்னை முதல் குமரி வரை நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசித்துவருகின்றனர். மாவட்டச் செயலாளர்களுக்கான நேர்காணல் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு பட்டியலும் தயாராக உள்ளது. இதனால் விரைவில் மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத்  திவாகரனுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். 

 திவாகரன்

மேலும் அவர் கூறுகையில், ``திவாகரனின் புதிய கட்சியால் அ.தி.மு.க-வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், அது தவறு. எங்களின் வருகையால் அ.தி.மு.க-விலும் தினகரன் தரப்பிலும் கடும் சலசலப்பு ஏற்படும்.   

அ.தி.மு.க-வில் உள்ள பலர், திவாகரன் மூலம்தான் இன்று பதவியில் உள்ளனர். இதனால், அவர்களில் பலர் திவாகரனுக்குத் துரோகம் செய்துவிட்டனர். இதனால், அண்ணா திராவிடர் கழகத்தில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது. மேலும், தினகரன் தரப்பினருக்கும் இந்தக் கட்சியில் இடமில்லை. அதே நேரத்தில் தே.மு.தி.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருக்கும் முக்கிய பிரமுகர்கள், எங்களின் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்.  

இதுதவிர சினிமா துறையிலிருந்தும் பலர் இந்தக் கட்சியில் சேர உள்ளனர். அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன. நிர்வாகிகள் நியமனத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் திவாகரன், இந்த மாத இறுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளும் நடந்துவருகின்றன. இந்தக் கட்சியில் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றும் காத்திருக்கிறது. கட்சியை வலுப்படுத்த அவர்கள் செய்யும் முயற்சி அடிப்படையில் இந்தப் பரிசு கொடுக்கப்படும்" என்றனர். 

 திவாகரன்

இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``மன்னார்குடி குடும்பத்தையே அ.தி.மு.க-விலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம். சிறையில் சசிகலா இருக்கிறார் என்ற கவலைகூட திவாகரனுக்கும் தினகரனுக்கும் இல்லை. தினகரனுக்கும் திவாகரனுக்கும் நடந்த மோதலில் சசிகலா மனவேதனையிலிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய பெயரைக்கூட திவாகரன் பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்தளவுக்கு மன்னார்குடி குடும்பத்தில் முட்டல், மோதல் இருந்துவருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க.வில் மாற்றம் ஏற்படும் என்று சசிகலா தரப்பினர் கருதினர். ஆனால், அவர்களுக்கு அது ஏமாற்றத்தையே கொடுத்தது. தினகரனை நம்பி எம்.எல்.ஏ-க்கள் பதவிகளை இழந்த 18 பேரில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க-வில் இணைய விருப்பம் தெரிவித்து தூதுவிட்டுள்ளனர். விரைவில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ தகுதி நீக்க தீர்ப்புக்கு முன் நல்ல செய்தி வரும்" என்றார். 

திவாகரன்

 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு முன்பிலிருந்தே தினகரனின் கூடாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தீர்ப்புக்குப் பிறகு, தினகரனுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அதிரடி முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில் திவாகரனின் புதிய கட்சி விவகாரமும் தினகரன் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. தினகரனிடமிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வழக்கை வாபஸ் பெற உள்ளதாகவும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கூறிவருகிறார். இது, தகுதி இழந்த மற்ற எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கவனித்த தினகரன், புதிய ரூட்டில் தன்னுடைய அரசியல் பயணத்துக்கு அச்சாரமிட்டுவருகிறார். 

 தினகரன், திவாகரனின் மோதலை இதுவரை வேடிக்கை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு இனி சில மாதங்களுக்கு ஆட்சிக்கும் கட்சிக்கும் சிக்கல் இல்லை என்ற நிம்மதியில் உள்ளனர். அதே நேரத்தில் தகுதி இழந்த எம்.எல்.ஏ-க்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்க தூது படலத்தை தீவிரப்படுத்தியுள்ளது அ.தி.மு.க கட்சித் தலைமை. அதற்கு ஓ.கே சொன்னவர்களிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.