' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை!' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள் | 4 different plans to preserve forest in place of 8 Way roads

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (19/06/2018)

கடைசி தொடர்பு:16:18 (19/06/2018)

' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை!' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்

' சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழி பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்கள் கேள்வி கேட்கவே கூடாது என அரசு நினைக்கிறது. அதுதான் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது' என ஆதங்கப்படுகிறார் பா.ம.க முன்னாள் எம்.பி டாக்டர் செந்தில்.

' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை!' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்

எட்டுவழி பசுமைச் சாலை

சேலம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது சேலம் டு சென்னை வரையிலான எட்டு வழி பசுமைச் சாலை. ' திட்டம் குறித்து மக்கள் பேசவே கூடாது என அரசு நினைக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாயில் கோயம்புத்தூர் – சென்னை, கன்னியாகுமாரி – சென்னை இடையே ஏற்கெனவே இருக்கிற இருவழி ரயில் பாதைகளின் அருகில் தனியாக சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பாதை அமைக்கப்பட்டால் பயனுள்ள திட்டமாக மாறும்' என்கிறார் பா.ம.க முன்னாள் எம்.பி டாக்டர் இரா.செந்தில்.

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமைச் சாலையை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது தமிழக அரசு. இதற்கான ஆட்சேபனைக் கூட்டம், கடந்த வாரம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், திட்டம் தொடர்பான தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். 'இந்தக் கூட்டத்துக்குள் வெளியாட்கள் வந்துவிடக் கூடாது' என்பதற்காக, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் மனு கொடுக்க வந்தவர்கள், அச்சத்துடனேயே கிளம்பினர். பசுமை வழிச் சாலையால் அழிக்கப்பட இருக்கும் மலைகள், ஆறுகள், காடுகள் குறித்துத்தான் சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எட்டு வழிச்சாலை குறித்துப் பேசி வந்த நடிகர் மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ், வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ந்து போன மனித ஆர்வலர்கள், ' சூழலுக்கு பாதிப்பில்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால், கைது செய்வதுதான் தீர்வா?' எனக் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்குப் பதிலாக புதிய திட்டம் ஒன்றை முன்வைக்கிறார் முன்னாள் எம்.பி டாக்டர்.செந்தில். அவரிடம் பேசினோம். 

மாற்றுத் திட்டம் எளிது!

' இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என நாங்கள் முடிவுகளைச் சொல்லவில்லை. சில கண்ணோட்டங்களைத்தான் சொல்கிறோம். நோய் வாய்ப்படும் மக்கள், தங்களுக்கான சிகிச்சையை தேர்வு செய்வதில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்த அரசாங்கம், அப்படி எந்த வாய்ப்பையும் வழங்காமல் தீர்மானமாக ஒன்றை முடிவு செய்துவிட்டு அறிவிப்பதுதான் தவறு என்று சொல்கிறோம். இந்தியாவில் நிலம் கையகப்படுத்தும் திட்டங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. காரணம், இதனால் ஏற்படும் மனஉளைச்சல், தொழில் பாதிப்புகள் உள்ளிட்டவை . அதுவே, இங்கிலாந்தில் நிலம் கொடுக்க வேண்டும் என்றால், மக்கள் மகிழ்ச்சியாக ஒப்படைக்கிறார்கள். அங்கு மக்களுக்குத் தேவையான இழப்பீட்டைக் கொடுக்கிறார்கள். சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்கள் கேள்வி கேட்கவே கூடாது என அரசு நினைக்கிறது. அதுதான் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது" என ஆதங்கப்பட்டவர், தொடர்ந்து சில விஷயங்களை முன்வைத்தார். 

டாக்டர் செந்தில்" சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிகள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படும், வேளாண் பெருமக்கள் பாதிக்கப்படுவார்கள், மரங்கள் வெட்டப்படும், காடுகள் அழிக்கப்படும் ஆகிய பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சட்டமன்றத்தில் விடையளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ' சாலைகள் மூலமே ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். இதனால் ஏற்படும் இழப்புகள் குறைவு. லாபங்கள் அதிகம்' என்று விளக்கமளித்திருக்கிறார். ‘இந்தச் சாலை அமைக்கப்பட்டால் சேலத்தில் இருந்து சென்னையை மூன்று மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். இது தொழில் வளர்ச்சிக்கு உதவும்’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். ’சாலைகள் ஒரு நாட்டின் இரத்தக் குழாய்கள்’ என்று மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் அவசியம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. அகலமான, தரமான, விரைவாக செல்லக்கூடிய சாலைகள் வேண்டும் என்ற நோக்கத்துக்காக அரசு பணியாற்ற வேண்டும். சேலத்தில் இருந்து சென்னையை மூன்று மணி நேரத்தில் அடைவதற்கான விரைவுச் சாலை வேண்டும் என்பதும் சரியான கருத்துதான். ஆனால், இதற்குச் செய்ய வேண்டியது விவசாய நிலங்களை அழித்து, காடுகளை அழித்து, மரங்களை வெட்டி புதிய சாலைகள் அமைப்பது அல்ல. அரசுக்கு பல்வேறு இதர வாய்ப்புகள் இருக்கின்றன. 

சேலம் டு வேலூர் சாலை!

இப்பொழுது சேலத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை சென்றடைய 5 மணி நேரமே ஆகிறது. இச்சாலையை விரைவுச் சாலையாக மாற்றினால் நிச்சயமாக பயண நேரத்தை குறைக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள அதிவிரைவுச் சாலைகள் (Express Way) அல்லது நெடுஞ்சாலைகள் (Motor way) அல்லது ஜெர்மனியின் ஆட்டோபான் (Autobahn) ஆகிய சாலைகளுடைய அமைப்பு வேறு. நம்முடைய தேசிய நெடுஞ்சாலைகளின் அமைப்பு வேறு. மேலே சொன்ன அதிவிரைவுச் சாலைகள் எவற்றிலும் எந்த இடத்திலும் சிக்னல்கள் கிடையாது. எந்த இடத்திலும் எதிரே வரும் வண்டிக்கு குறுக்காக வண்டியை செலுத்தி ஒரு திருப்பத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. சாலையிலே இணைய விரும்பும் வண்டிகள் செங்குத்தாக வந்து இணையாமல், இணைச் சாலையில் ஒரு குறிப்பிட்ட தொலைவு பயணித்து, அதிவிரைவுச் சாலையில் வண்டி செல்லுகிற வேகத்திற்கு இணையான வேகத்தை அடைந்த பிறகு இணைகிற அளவுக்குத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்தச் சாலைகள் அனைத்தும் விலங்குகளும் பாதசாரிகளும் குறுக்கே வந்துவிடாத வண்ணம் வேலியிடப்பட்டிருக்கின்றன. இந்திய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் பயணம் காலதாமதமாவதற்கும் முக்கிய காரணங்கள் இத்தகைய குறுக்கீடுகளும் சாலை ஓரங்களில் இருக்கின்ற கடைகளும் அந்தக் கடைகளில் உணவு அருந்தவும் பொருட்கள் வாங்கவும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதினால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலும்தான். இந்தக் குறைபாடுகளை நீக்கி, சேலம் – தருமபுரி – கிருஷ்ணகிரி - வேலூர் வழியாக செல்கின்ற நெடுஞ்சாலையை உலகம் முழுவதும் இருக்கின்ற அதிவிரைவுச் சாலைகள் போல அமைத்தாலே மூன்றரை மணி நேரத்தில் சென்னையை அடைந்துவிட முடியும். இதற்காக சிறிய அளவு சில இடங்களில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் வரலாம். ஆனால், நிச்சயம் பெரிய அளவில் நிலங்கள் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. 

ஆத்தூர் டு சென்னை!

எடப்பாடி பழனிசாமிஇரண்டாவதாக, சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாகச் சென்று திருச்சி – சென்னை நெடுஞ்சாலையை அடையும் சாலை இருக்கிறது. இது கட்டணச் சாலை. தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிற சாலை. ஆனால் இந்தச் சாலை மோசமான வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் நான்கு வழிச் சாலையாக இருக்கிறது, திடீரென்று இரண்டு வழிச் சாலையாக மாறிவிடுகிறது. நான்கு வழிச்சாலையாக இருக்கும்போது இருபுறங்களில் செல்கிற வாகனத்தை பிரிக்கிற மீடியன் என்று சொல்லக்கூடிய அந்த நடு அமைப்பு இருக்கிறது. திடீரென்று எந்த அமைப்பும் இல்லாத இருவழிச் சாலையாக மாறி எதிரே வண்டி வருகிறது. நான்கு வழிச் சாலை இரண்டு வழிச் சாலையாக மாறுகிற இடங்களில் எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. அந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் முறைகளும் அபாயகரமானதாக இருக்கிறது. அங்கே இருக்கிற பல கல்வி நிறுவன வாகனங்களும் தனியார் வாகனங்களும் அரசு வாகனங்களும்கூட திடீரென எதிரே தவறான வழியிலே வருவதைப் பார்க்கலாம். முறையான நான்கு வழிச் சாலையாக அமைக்காமல் ஒரு சாதாரண சாலைக்காக கட்டணம் வாங்குவது என்பதே அநியாயமானது. 

அயோத்தியாபட்டினம் டு சென்னை!

புதியதாக பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சேலத்தில் இருந்து வாழப்பாடி – ஆத்தூர் - கள்ளக்குறிச்சி வழியாக அமைக்கப்பட்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து, முறையான அதிவிரைவுச் சாலையாக முன்னே குறிப்பிட்டது போல இருபுறமும் வேலிகள் அமைத்து பாதசாரிகளும் விலங்குகளும் குறுக்கே வராத வண்ணம் திட்டமிட்டு, சிக்னல்களும் சாலைப் பிரிவுகளும் இல்லாமல் அமைத்தால் அந்தச் சாலைகளின் பயண நேரமும் இப்பொழுது இருக்கிற ஐந்து அல்லது ஐந்தரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாகக் குறையும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வாய்ப்பாக சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டிணம் – அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் வழியாகச் சென்று பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையினை இணைக்கும் சாலை இருக்கிறது. இந்தச் சாலையை விரிவாக்கி, தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான அம்சங்களோடு அமைத்தால் பயண நேரத்தை நிச்சயம் மூன்று மணி நேரமாகக் குறைக்க முடியும். 

கிடப்பில் கிடக்கும் திட்டங்கள்!

இவற்றை விட முக்கியமாக, உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றிச் செல்ல பெருமளவில் ரயில்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் ரயில் சேவை இன்னமும் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய அவசியமும் வாய்ப்பும் இருக்கிறது. சென்னை – கோயம்புத்தூர், சென்னை – கன்னியாகுமாரி ரயில் பாதைகளில் ஏற்கனவே இருக்கிற இரண்டு வழிப்பாதைகளின் ஓரம் இன்னும் ஒரு பாதை, முழுக்க, முழுக்க சரக்கு வண்டிகள் பயணத்திற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் திட்டமும் நீண்ட நாட்களாக இருக்கிறது. சாலைப் பயணம் அதிக செலவாகக் கூடியது. ரயில் பயணத்தைவிட அதிகமான விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. கோயம்புத்தூர் – சென்னை, கன்னியாகுமாரி – சென்னை இடையே ஏற்கனவே இருக்கிற இரண்டு வழி ரயில் பாதைகளின் அருகில் தனியாக சரக்கு ரயில் போக்குவரத்துக்கான ஒரு சரக்குப் பாதை அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக அளவில் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். ரயில் பயணம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது, செலவு குறைவானது, விபத்து குறைவானது' என்றார் விரிவாக. 
 


அதிகம் படித்தவை