2 வாரமாக சர்வர் முடங்கியது! தவிக்கும் காரைக்குடி தலைமை தபால் நிலைய வாடிக்கையாளர்கள்

காரைக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கம்ப்யூட்டர் சர்வர் வேலை செய்யாததால் வாடிக்கையாளர்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காரைக்குடி என இரண்டு தபால் கண்காணிப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றது. இதில் காரைக்குடி தபால் கண்காணிப்பு அலுவலகத்துக்கு உட்பட்டு காரைக்குடி தேவகோட்டை என இரண்டு தலைமை அஞ்சலகங்களும் 39 துணை அஞ்சலகங்களும் 77 கிளை தபால் நிலையங்களும் இயங்கி வருகின்றன. காரைக்குடி தலைமை அஞ்சலகத்துக்கு உட்பட்டு 16 துணை தபால் நிலையமும் 23 கிளை தபால் நிலையமும் இயங்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்துத் தபால் நிலையங்களும் கோர்பேங்கிங் சிஸ்டத்தில் மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மெயின் சர்வரிலிருந்து தலைமை தபால்நிலையங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. காரைக்குடி தலைமை தபால்நிலையத்தில் சுமார் 6-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களுக்கு மெயின் சர்வரிலிருந்து இணைப்பு தரப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகச் சர்வரில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் வங்கி பணப் பரிவர்த்தனைகள் முற்றிலுமாக முடங்கிப்போய்விட்டது. தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடர் வைப்பு கணக்கு மாதாந்திர வருமான திட்டம் போஸ்டல் இன்ஜூரன்ஸ் பார்சல் புக்கிங் பார்சல் டெலிவரி உட்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பணம் கட்டியவர்கள் தங்களின் அவசர தேவைக்குகூட பணம் எடுக்க முடியாமல் ரெம்பவே அவதிப்பட்டு வருகின்றனர். இதே துணை மற்றும் கிளை தபால்நிலையங்களில் பணம் கட்டியவர்களும் பணம் எடுக்க முடியாமல் திண்டாடும் நிலை உருவாகியுள்ளது. உயர் அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தும் ஆமை வேகத்திலேயே தபால்துறை நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்படியிருந்தால் எப்படி பொதுமக்கள் தபால் நிலையங்களைத் தேடி வருவார்கள் என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!