வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (19/06/2018)

கடைசி தொடர்பு:18:21 (19/06/2018)

குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவன்! மண்வெட்டியால் அடித்துக் கொலைசெய்த மனைவி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவியே மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவியே மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனைக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். 

கொலை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கிராமம், புலவன்குடியிருப்பு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், ஜனார்த்தனன். கூலித் தொழிலாளியான இவர் மனைவி ராஜாமணி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். தொழிலாளியான ஜனார்த்தனன், மதுவுக்கு அடிமையாகிவிட்டார். அவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியவில்லை. 

அத்துடன், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். வேலைக்குச் செல்லாத நாள்களில் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்துள்ளார். கணவனின் செயலை மனைவி கண்டித்தபோதிலும் அவர் திருந்தவில்லை. இந்த நிலையில், நேற்று இரவும் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்ததுடன் வீட்டிலிருந்து பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. 

அதனால் ஆத்திரம் அடைந்த ராஜாமணி காலையில் கணவர் வந்ததும் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் இருந்த மனைவி ராஜாமணி, அருகில் இருந்த மண்வெட்டியால் கணவரை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ஜனார்த்தனன் உயிரிழந்தார். மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். 

உயிரிழந்த ராஜாமணியின் உடலை மீட்ட போலீஸார், உடற்கூறு பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாமணி கைது செய்யப்பட்டார். மதுவின் கொடூரத்தால் மனைவியே கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.