`முடிந்தால் 18 பேரில் ஒருவரையாவது இழுத்து பார்க்கட்டும் - முதல்வருக்கு தங்க தமிழ்ச்செல்வன் சவால்!’ | Thanga Tamil Selvan challenges EPS over disqualified MLAs issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (19/06/2018)

`முடிந்தால் 18 பேரில் ஒருவரையாவது இழுத்து பார்க்கட்டும் - முதல்வருக்கு தங்க தமிழ்ச்செல்வன் சவால்!’

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராணியிருந்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவரையாவது அவர் பக்கம் இழுத்துப்பார்க்கட்டும் எனத் தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.

``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராணியிருந்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவரையாவது அவர் பக்கம் இழுத்துப்பார்க்கட்டும்'' எனத் தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.

தங்க தமிழ்செல்வன்


கடந்த வாரம் வெளியான தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே 3 வது நீதிபதியாக உயர் நீதிமன்ற நீதிபதி விமலா சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு மேலும் காலதாமதமாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் நீதிமன்றத்தில் தான் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன், `18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நான் வழக்கைத் திரும்பப் பெற முடிவுசெய்துள்ளேன். இதைக் காரணம் காட்டி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டி.டி.வி-க்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளதாகக் கூறி வருகின்றனர். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. பிரிந்து செல்வதாக இருந்தால் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். 2 நீதிபதிகள் கூற முடியாமல் 3வது நீதிபதிக்கு மாற்ற இது ஒன்றும் கொலை வழக்கல்ல. நீதிபதிகளை நம்பினால் மேலும் காலதாமதமாகும். ஓட்டை மாற்றிப் போட்டவர்கள் துணை முதல்வராகவும் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். ஆட்சியைக் காப்பாற்ற முயன்ற நாங்கள் தகுதி நீக்கமா, தமிழகத்துக்கு ஒரு தீர்ப்பு, புதுவைக்கு ஒரு தீர்ப்பா. இதுதான் ஜனநாயகமா எங்களுக்கு நீதித்துறையின் மேல் நம்பிக்கையில்லை. அதனால்தான் வழக்கை நான் வாபஸ் வாங்குகிறேன்.

மேலும் டி.டி.வி-யிடம் கேட்டுத்தான் வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்தேன். நான் வாபஸ் வாங்கினாலும், மீதமுள்ள 17 எம்.எல்.ஏ-க்கள் ஒட்டுமொத்தமாக வழக்கை எதிர்கொள்வர். எடப்பாடி பழனிசாமிக்கு திராணியிருந்தால் எங்கள் 18 பேரில் ஒருவரையாவது இழுத்துபார்க்கட்டும். அப்படி இழுத்தால் மீதமுள்ள எம்.எல்.ஏ-க்களும் அவர்பக்கம் செல்வோம். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒருகல்லைகூட எடுத்துவைக்க முடியவில்லை. தற்போது 8 வழிச் சாலையை யார் கேட்டது?' என்று கொந்தளித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய வெற்றிவேல், `சபாநாயகரின் உத்தரவு வருங்கால சந்ததியினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது. அதற்காகவே மீதமுள்ள 17 எம்.எல்.ஏ-க்களாகிய நாங்கள் தொடர்ந்து சட்டப்படி போராடுவோம். தகுதிநீக்க வழக்கின் முடிவு உச்ச நீதிமன்றத்தில்தான் வரும். அதுவரை நாங்கள் காத்திருப்போம். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது’ எனக் காட்டமாகக் கூறினார்.


[X] Close

[X] Close