`நிச்சயம் நமக்கான நீதி கிடைக்கும்!’ - பேரறிவாளன் குறித்து ராஜுமுருகன் உருக்கம்

‘இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தும் இன்றும் மக்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் பேரறிவாளன்’ என இயக்குநர் ராஜு முருகன் கூறியுள்ளார்.

ராஜு முருகன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். அவர்மீது தவறில்லை. எனவே, அவரை விடுவிக்க வேண்டும் எனப் பலர் கூறிவந்தனர். அவரின் தாயார் அற்புதம்மாள் பல தலைவர்களையும் சந்தித்து பேரறிவாளனின் விடுதலை குறித்துப் பேசி போராட்டங்களும் நடத்தினார். பேரறிவாளனின் விடுதலை நீண்டகாலமாக நடந்து வரும் ஒரு பெரிய பிரச்னையாகும்.

இது இப்படி இருக்க தற்போது ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கிய, இயக்குநர் ராஜு முருகன் பேரறிவாளன் விடுதலை குறித்து    பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “பேரறிவாளன் முழுமையாகக் குற்றமற்றவர் என்பது தெரிந்தும் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் அநீதி என்பதை ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் இந்த மண்ணின் மக்களின் பிள்ளை, எங்களின் தோழன், எங்களின் சகோதரன்.  இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டும் அங்கிருந்தும்கூட மக்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு மகத்தான தோழன். அவருக்கான நீதி என்றும் தோற்றுப்போகாது. அது கிடைக்கும் வரை நாங்களும் ஒட்டு மொத்த தமிழ் உறவுகளும் ஓயப்போவதில்லை. அற்புதம்மாளின் போராட்டங்களும் கண்ணீரும் ஒருபோதும் வீணாகாது. அம்மா, நமது பிள்ளை வெளியே வந்து சமூகத்தில் உலவும் வரை மக்களுடன் மக்களாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை உங்களின் பின்னால் நாங்கள் இருப்போம். அந்த நீதி கிடைக்கும் வரை அனைவரும் அத்தனை தளங்களிலும் இதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கும். நிச்சயம் நமக்கான நீதி கிடைக்கும். நிச்சயம் நமக்கான விடியல் பிறக்கும். நன்றி” எனக் கூறியுள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!