வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (19/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (19/06/2018)

`மாணவியின் மரணத்தில் நீதி வேண்டும்’ - பள்ளியை முற்றுகையிட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

திருப்பூரில் கடந்தவாரம் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி காவ்யாஸ்ரீயின் மரணத்தை உரிய முறையில் நீதி விசாரணை செய்ய வேண்டும் எனப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அன்னையம்பாளையத்தில் வசித்து வரும் முத்துக்கிருஷ்ணன் - கலாதேவி தம்பதியரின் மகள் காவ்யாஸ்ரீ. இவர் திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதியன்று வழக்கம்போல பள்ளி முடிந்து மாலை வீட்டுக்குத் திரும்பிய காவ்யாஸ்ரீ, புத்தகப் பையை வீட்டுக்குள் வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் கழிவறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகக் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவி தற்கொலைக்கு நீதிக்கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்.

காவ்யாஸ்ரீயைப் பள்ளியில் சக மாணவர்களின் முன்னிலையில் வகுப்பு ஆசிரியர் திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனத் தகவல்கள் கசிந்தன. அதைத்தொடர்ந்து காவ்யாஸ்ரீயின் பெற்றோரை நேரில் சென்று சந்தித்த திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தியிடம், "எங்களின் மகளைக் கடுமையாகத் திட்டி, அவள் தற்கொலைக்கு காரணமாகிய சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினர். அதிகாரியும், 'அப்படி ஏதாவது நடந்திருந்தால், தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றார். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது துறைரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த காவ்யாஸ்ரீயின் பெற்றோர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து இன்று பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது நம்மிடம் பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் சிகாமணி, "காவ்யாஸ்ரீ தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் பச்சை மையைப் பயன்படுத்தி எழுதியதால், அவரது வகுப்பு ஆசிரியர் அவரை 1 மணி நேரம் வகுப்பறைக்குள் எழுந்து நிற்கச் சொல்லி தண்டனை கொடுத்திருக்கிறார். மேலும் சக மாணவர்கள் முன்னிலையில் அசிங்கமாகப் பேசி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் காரணமாகவே, இந்தத் தற்கொலை நடந்திருக்கிறது'' என்றார்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, `மாணவியின் தற்கொலைக்கு காரணமான சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவேட்டில் மர்ம மரணம் என்று பதிவு செய்திருப்பதை மாற்றிவிட்டு, தற்கொலைக்குத் தூண்டியதன் காரணமாகவே காவ்யாஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பரிசீலனை செய்வதாக வருவாய் அலுவலர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போராட்டம்  முடிவுக்கு வந்தது.