கக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்?

கக்கனின் பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ளாததன் காரணம் குறித்த கட்டுரை...

கக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்?

பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அவர்; எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்போனவர். ஒருமுறை அவரைச் சந்திக்க மலேசியா வேளாண் துறை அமைச்சர் வந்திருந்தார். இருவரும் சந்தித்துக்கொண்டபின், மலேசிய அமைச்சர் அந்தத் தமிழக அமைச்சருக்குத் தங்க பேனா ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதை அவர் வாங்க மறுத்தார். உடனே மலேசிய அமைச்சர், "அவசியம் பேனாவை வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று அன்புக் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, தனது உதவியாளரை அழைத்தார் தமிழக அமைச்சர். அவரிடம், இந்தப் பேனாவை, மலேசிய அமைச்சர் தனக்கு வழங்கியதாக அரசுப் பதிவேட்டில் எழுதுமாறு உத்தரவிட்டார். இதைக் கேட்ட மலேசிய அமைச்சர் அதிர்ச்சியானதுடன், "இது, உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்குத்தான். அரசுக்கு அல்ல'' என்றார். அதற்குத் தமிழக அமைச்சர், "நான் அமைச்சர் என்பதற்காகத்தானே இந்தப் பேனாவைத் தருகிறீர்கள். அப்படியிருக்கையில், நான் பதவியைவிட்டு வெளியேறும்போது அரசிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுதானே முறை'' என்றார். அவரின் பதிலைக் கேட்டதும் மலேசிய அமைச்சர் வாயடைத்துப் போனார். இப்படி லஞ்சம், ஊழல், அன்பளிப்பு உள்ளிட்ட எதற்கும் ஆசைப்படாதவராக வாழ்ந்த அந்தத் தமிழக அமைச்சர் வேறு யாருமல்ல... மாமனிதர் கக்கன்தான்.

கக்கன்

அவருடைய 109-ஆவது பிறந்த நாள் விழா நேற்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. அதேவேளையில், அவருடைய பிறந்த நாளையொட்டி நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்ட விழாவில் மூத்த தலைவர் குமரி அனந்தன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், கக்கனின் பேரன் பி.வி.தமிழ்ச்செல்வன், செல்வபெருந்தகை, செயற்குழு உறுப்பினர் ஜி.தமிழ்செல்வன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி உள்ளிட்ட 20-க்கும் உட்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகத் தெரிகிறது. கக்கனின் பிறந்த நாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்களே கலந்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

கக்கன் பிறந்த நாள் விழா

இதுகுறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் விசாரித்தோம். "கக்கனின் பிறந்த நாள் விழாவை நடத்துவதற்கு, காங்கிரஸ் தலைவர் அல்லவா எல்லோரையும் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவரே விழாவில் கலந்துகொள்ளவில்லை. அவரே கலந்துகொள்ளாதபோது மற்றவர்கள் எப்படி விழாவுக்குப் போவார்கள்? பொதுவாக, தலைவர் இப்போது எந்தக் காங்கிரஸ் நண்பர்களிடமும் தொடர்பில் இல்லை. அவர்களுடன் அவருக்கிருந்த தொடர்பு முற்றிலும் குறைந்துவிட்டது.'' என்றனர் மிகவும் நிதானமாக.

கக்கன்இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``கக்கனின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. அதேநேரத்தில் சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு தலைவர் வரவில்லை. முன்னதாக 20 பேர் மட்டும் வந்திருந்தனர் என்பது உண்மைதான். அதன்பின்னர், சில நிர்வாகிகள் வந்து கலந்துகொண்டனர். அவர்கள் வந்தபின்பு, தலைவர் வராததற்குக் காரணம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், தலைவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. `தலித்களைப் புறக்கணிக்கிறார்; ஸ்காலர்ஷிப் கொடுப்பதில்லை; நோட்டீஸ் போர்டில் செய்தி போடுவதில்லை' என அவர்மீது குற்றங்களை அவர்கள் அடுக்கினர். இது, மற்ற தொண்டர்களிடையே மோதலாக வெடித்தது. பின்னர், சில தலைவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். அவர், இதுபோன்ற தலைவரின் பிறந்த நாள் விழாவை அருகில் இருந்து சிறப்பாக நடத்தியிருக்க வேண்டும். இதனால் தலைவர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே தொடர்பு இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், தலைவருடன் மற்ற நிர்வாகிகள் யாரும் இணக்கமாகச் செல்வதில்லை; அதிருப்தி நிலவுகிறது. அரியலூர் மாணவி அனிதாவின் இறப்புக்குத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். குறிப்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோதும் அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவராக இருப்பவர் செல்லவில்லை. இதனால், அவர்மீது பயங்கர விமர்சனம் எழுந்தது. இதுதவிர, அனைவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால் பலரும் ஒற்றுமையின்றிச் செயல்படுகிறார்கள். இது தற்போதுதான் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது'' என்றார் தெளிவாக. 

நிர்வாகிகளின் ஒற்றுமையின்மையால் நேர்மையான தலைவரின் பிறந்த நாள் விழா இந்த நிலைக்கு போயிருக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!