`கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை!' - காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் திட்டவட்டம்

`மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது’ எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ்

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவைப் பா.ஜ.க இன்று வாபஸ் பெற்றது. இதனால், காஷ்மீரில் நடந்து வரும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வுக்கு 25 எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்.எல்.ஏ-க்களும் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை.

இதையடுத்து, ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை மெஹபூபா முஃப்தி அளிக்க உள்ளதாக, மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில், பா.ஜ.க அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதையடுத்து, 'காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆட்சியை அமைக்க முடியும்' என்ற நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், 'மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `நடப்பது எல்லாம் நன்மைக்குத்தான். காஷ்மீரில் கடந்த மூன்று ஆண்டுகளாக ராணுவ வீரர்களும் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பா.ஜ.க செய்த தவற்றை தற்போது ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு இடம் இல்லை' எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!