`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை | Man arrested for killing his son

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (19/06/2018)

`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை

கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர தந்தையின் குட்டு 8 நாள்களுக்குப் பிறகு வெளியில் தெரிந்தது. 

சென்னை திருவொற்றியூர், விம்கோ ரயில் நிலையம் அருகில் கடந்த 10-ம் தேதி 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரின் கழுத்து அறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பிணத்தின் அருகில் கறி வெட்டும் கத்தி ஒன்றும் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார், அவரைக் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். ஆனால், அவர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதனால் கொலை செய்யப்பட்ட வாலிபரின் படத்தைப் போலீஸார் போஸ்டர் அடித்து பல பகுதிகளில் ஒட்டினர். ஆனாலும், அவரை அடையாளம் காட்ட ஒருவரும் வரவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டவர் குறித்து எந்தத் தகவலும் தெரியாமலேயே இருந்தது. 

இந்நிலையில் திருவொற்றியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சம்சா வியாபாரி நவசுதீன் என்பவரின் மகன் முகமது உசேன்தான் கொலை செய்யப்பட்டவர் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. மேலும், முகமது உசேன் மனநிலை பாதிக்கப்பட்டவர். சில நாளாக முகமது உசேனைக் காணவில்லை என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்தது. ஆனால், மகன் மாயமானது குறித்து அவரின் தந்தை நவசுதீன் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸார், நவசுதீனிடம் விசாரித்தனர். விசாரணையில் மகனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட அவரைத், `தனக்குப் பிறகு, பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அதனால், கத்தியால கழுத்தறுத்து, கொலை செய்து, பிணத்தை ரயில் நிலையம் அருகில் வீசிவிட்டுச் சென்றேன்’ என்று போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close