வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (19/06/2018)

கடைசி தொடர்பு:20:29 (19/06/2018)

காதலி வீட்டு முன் கத்தியால் குத்திக்கொண்ட ஃபேஸ்புக் காதலன்!

கல்யாணம் பண்ணு இல்ல கருமாதி பண்ணு என்று கூறிக்கொண்டே காதலி வீட்டு முன் காதலன் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை முயற்சி

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் குளித்தலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக இவருக்கு நண்பரானார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதனால் சில தினங்களுக்கு முன்பு பெண் வீட்டுக்கு வந்த சுரேஷ்குமார், பெண்ணைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் நிலக்கோட்டை காவல்நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் கூறினார்கள். அதைத்தொடர்ந்து சுரேஷ்குமாரை அழைத்து அறிவுரை கூறிய போலீஸார், `இனிமேல் தன் காதலியைத் தொடர்புகொள்ள மாட்டேன்' என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். அந்தப் பெண்ணும் தன்னை மறந்துவிடுமாறு சுரேஷிடம் கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ்குமார் மீண்டும் காதலி வீட்டுக்கு வந்து அவரை தன்னுடன் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கத்தியால் தன் வயிற்றில் குத்திக்கொண்டார். குடல் சரிய மயங்கி விழுந்தவரை அந்தப் பெண்ணின் குடும்பத்தார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகச் சொல்லி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாகப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஃபேஸ்புக் மூலமாகக் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க