வேல்முருகன் கைது முதல் விடுதலை வரை - நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச் சாவடியை உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மே 25-ம் தேதி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு நீர்சத்து குறைவின் காரணமாகவும், சிறுநீரக பிரச்னையாலும் வேல்முருகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீஸார் அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

வேல்முருகன்

என்.எல்.சி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது அவர் பேசிய பேச்சுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் கைது செய்து புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர். அதன்பின் வைகோ, தினகரன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வேல்முருகனை சிறையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

தன் மீது இருக்கும் வழக்கில் ஜாமீன் கேட்டு தனது வக்கீல் காந்தி குமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார் வேல்முருகன். இந்த மனு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சரோஜினிதேவி வேல்முருகன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், வேல்முருகன் தரப்பு மீண்டும் ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.

வேல்முருகன் ஸ்டாலின்

இதற்கிடையில், தூத்துக்குடி போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீது நிலுவையில் இருக்கும் பழைய ஃபைல்களை போலீஸ் தூசுதட்டி எடுக்கத் தொடங்கியது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாக வழக்குப் போடுவது, நள்ளிரவில் வீடு புகுந்து தேடுதல் வேட்டை நடத்துவது, அமைப்பில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுப்பது போன்ற டார்ச்சர்களில் போலீஸார் இப்போது இறங்கியுள்ளனர். இன்னொரு பக்கம், பல்வேறு போராட்ட வழக்குகளும் தோண்டப்படுகின்றன. போராட்டங்களில் ஈடுபடுவர்கள், முன்னின்று செயல்படுபவர்கள் ஆகியோர் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன் நீட்சியாகவே 'உபா சட்டம்' (UAPA - சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி விவகாரம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் நிலவிவரும் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஆர்வம் காட்டிய வேல்முருகன் தொடர்புடைய வழக்குகளைத் தூசுதட்டி, அவர்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேல்முருகன் கைதை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், தனியார் அமைப்புகளும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், சுங்கச்சாவடியை தாக்குதல், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியது ஆகிய இரண்டு வழக்குகளிலிருந்தும் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நேற்று உத்தரவிட்டார். பல்வேறு சிறை வரைமுறைகளைத் தாண்டி வேல்முருகன் சிறையில் இருந்து விடுதலையாவதற்கு இரண்டு நாள்களுக்கு மேல் ஆகும் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணியளவில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அவருக்கு சிறை முன் கூடி வரவேற்பை அளித்துள்ளனர். மருத்துவச் சிகிச்சைப் பெற்று வந்ததால் தற்போது மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடக்க இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!