வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (19/06/2018)

கடைசி தொடர்பு:20:22 (19/06/2018)

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டிகூட பனை ஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டிகூட பனை ஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி

யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நமக்கு செய்துவிட்டு போயிருக்கிறார். எல்லாவற்றையும் விட ஆண்ட்ராய்டு போன், துரித உணவு என்று 'நாகரீக மேனியா'வில் திரிந்த இன்றைய இளைஞர்களை இயற்கை குறித்து அவர் சிந்திக்க வைத்ததுதான் உச்சிமுகரும் விஷயம். அப்படி எம்.சி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் கை நிறைய சம்பளம் தந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது ஒரத்தநாட்டில் மூலிகை சூப், இயற்கை முறையில் குளிர்பானங்கள், உணவுகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார் கலையரசன். காரணம், நம்மாழ்வார் ஊட்டிய விழிப்புஉணர்வு.

இயற்கை உணவு அங்காடி

சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில் நடந்த விழாவிற்கு வந்த கலையரசனிடம் பேசினோம். 

"எனக்கு சொந்த ஊர் ஒரத்தநாடு பக்கமுள்ள ஊரச்சி. எனக்கு இப்போ இருபத்தேழு வயசாவுது. விவசாய குடும்பம்தான். ஆனா எங்க குடும்பம் விவசாயத்துல நொடிச்சு போனுச்சு. 'நாங்க விவசாயத்துல கெடந்து பிரயோசனப்படாத பொழப்பு பொழப்பு பொழச்சது போதும். நீயாவது நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போ'ன்னு சொல்லி என்னை எங்கப்பா எம்.சி.ஏ படிக்க வெச்சார். 2013 ல் படிச்சு முடிச்ச என்னை சென்னைக்கு குடும்பமே சேர்ந்து பஸ் ஏத்திவிட்டாங்க. அங்க டிஸ்கவரி பதிப்பகத்துல வேலை கிடைச்சுச்சு. ஓரளவு நல்ல சம்பளமும் கொடுத்தாங்க. ஆனால், என்னை தூக்கி நெருப்புல தள்ளுனாப்புல இருந்துச்சு. இயற்கையாகவே எனக்கு நல்ல உணவு, பாரம்பர்ய உணவுகள் மீது அதீத நாட்டம் உண்டு. என் அண்ணன் ராஜசேகர் வேற நம்மாழ்வார் பாதிப்புல இயற்கை விவசாயம் பண்ணினார். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம்மாழ்வார் அய்யா சொன்ன விஷயங்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். என்னால சென்னைல இருக்க முடியலை. 

2016 ம் வருடம் ஊருக்கு வண்டி ஏறிட்டேன். 'ஏன் இங்க வந்தே? இங்க என்ன பண்ண முடியும்?'ன்னு வீட்டுல கேட்டாங்க. அதை காதுல வாங்கிக்காம 9 வகையான தானியங்களை முளைக்கட்டி, அதை ஒரத்தநாட்டில் உள்ள பத்து டீக்கடைகளில் விற்பனை செஞ்சேன். 'இதெல்லாத்தையும் யார் வாங்கி சாப்பிடுவா?'ன்னு கேட்டவங்கக்கிட்ட, மிகவும் போராடிதான் முளைக்கட்டிய தானியங்களை வாங்க வச்சேன். அதன்பிறகு அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். இதற்கிடையில், எங்க வீட்டுல மாப்பிள்ளை சம்பா ,கருப்பு கவுனி அரிசின்னு இயற்கை உணவுக்கு மாறினோம். இருந்தாலும்,எங்க வீட்டுல என் செயலை ஏத்துக்கலை. நண்பர்களும், 'எம்.சி.ஏ படிச்சுட்டு, இப்படி தண்டத்தனம் பண்றியே'ன்னு அவதூறு பேசினாங்க.  நம்மாழ்வார் சொல் மனசுல இருந்ததால அவங்க சொற்கள் என் காதுகள்ல ஏறலை. நான் சாப்பிடும் நல்ல உணவு என்னோடு போகக்கூடாது. மக்களுக்கும் கிடைக்கணும். நல்ல உணவு குறித்த விழிப்புஉணர்வும் அவங்களுக்கு கிடைக்கணும்ன்னு நினைச்சேன். அதனால்தான்,'மகிழ்'ங்கிற பேர்ல இந்த வருட ஆரம்பத்துல ஒரத்தநாட்டில் இயற்கை உணவுப்பொருள் அங்காடியை திறந்தேன். 'உடல் போற்றி மகிழ்தல் இனிது'ன்னு போர்டுல வாசகம் எழுதி போட்டேன். எல்லோரும், எனக்கு ஏதோ ஆயிட்டதா சொல்லி சிரிச்சாங்க. நான் அதை கண்டுக்கலை.

 இயற்கை உணவு

பகல்ல நாட்டுச்சக்கரைப் போட்டு நன்னாரி சர்பத் விக்கறேன். நாட்டுமாடு பால்ல போடுற பால் சர்பத் விற்கிறேன். அதோடு, இயற்கை பொருள்கள்ல செஞ்ச மசாலா மோர், மாங்காய் மோர், நெல்லி மோர்ன்னு உடலுக்கு வலுசேர்க்ககூடிய பானங்களை விற்பனை செய்றேன். அதேபோல்,மாலை நேரத்துல வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், பசலை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, வாழைத்தண்டு, காளான் உள்ளிட்ட உணவு பொருள்கள்ல சூப் தயாரிச்சு விற்கிறேன். கூடவே,வாழைப்பூ, கீரை, காய்கறின்னு பல பொருள்கள்ல வடைகள் போட்டு விக்கிறேன். சுண்டல் வகைகள்ல, நவதானிய சுண்டல், முளைக்கட்டிய பச்சைப் பயிர்களில் சுண்டல்ன்னு செய்றேன். இனிப்பா, பச்சைப் பயிர் கஞ்சி,கம்பு கஞ்சி,கம்பு அல்வான்னு செஞ்சு விற்பனை செய்றேன். குறைஞ்ச விலையில நிறைவா தர்றேன். சொற்ப பேர்தான் இப்போதைக்கு வர்றாங்க. அதுவும்,யோசிச்சுதான் வர்றாங்க. இருந்தாலும், ஒரு தடவை வந்துட்டா, அப்புறம் ரெகுலரா வர ஆரம்பிச்சுடுறாங்க. 

 கலையரசன் கடை

இயற்கையான பொருள்களை பயன்படுத்தனும்ங்கிறதுல உறுதியா இருக்கேன். கடைக்கு 'மகிழ்'ன்னு பெயர் வச்சுருக்கேன். அந்த விளம்பர பலகையைகூட சணல் சாக்குகள், பனை ஓலைகளை கொண்டு அமைச்சுருக்கேன். மண்பானை, மண்குவளைகளை மட்டுமே பயன்படுத்துறேன். அதேபோல்,சூப் காய்ச்ச மற்ற உணவு பொருள்களை தயார் பண்ண விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்துறேன்.

அதேபோல்,சுண்டல்,வடைகளை கஸ்டமர்களுக்கு வழங்க தொண்ணைகளை பயன்படுத்துறேன். காசு வாங்கிப் போடக்கூட பன ஓலையில் செய்யப்பட்ட கல்லாவைதான் பயன்படுத்துறேன். எங்க வீட்டுல இன்னும் என்னை நம்பலை. ஆனா, நல்ல உணவை நம்மாழ்வார் அய்யா வழியில் மக்களுக்கு வழங்குறேனே என்ற திருப்தி இப்போதைக்கு இருக்கு. 'உணவு குறித்த விழிப்புஉணர்வை பண்ணுகிறோமே'ங்கிற மனதிருப்தியும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல வழிகாட்டியா நம்மாழ்வார் அய்யா இருக்கார். நல்லதே நடக்கும்" என்று முடித்தார். 


 


டிரெண்டிங் @ விகடன்