வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (19/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (19/06/2018)

"காவிரி விஷயத்தில் தங்களுக்குத் தாங்களே பாராட்டிக் கொள்வதா?" அ.தி.மு.க-வுக்கு சி.பி.எம். கேள்வி

"காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை உறுதி செய்திருப்பது அ.தி.மு.க அரசு மட்டுமே" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், முழுமையாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாததற்கு விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

காவிரி தீர்வு - எடப்பாடி பழனிசாமி பேச்சு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு காவிரி ஆணையத்திற்கான உறுப்பினர்களை அமைக்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.
ஆனால், காவிரிப் பிரச்னையில் வெற்றிபெற்று விட்டதாகக் கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அவர், "காவிரி நீர்ப் பிரச்னை என்பது கடந்த 38 ஆண்டுகளாக நீடித்த நிலையில், சட்டப்போராட்டம் மூலம் அ.தி.மு.க. அரசு தற்போது இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கச் செய்துள்ளது. காவிரி நீரைப் பெற தமிழக விவசாயிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடந்த 38 ஆண்டுகளாகப் போராடினர். அதில் முக்கியமாக போராடியது அ.தி.மு.க. இந்தப் பிரச்னையில் தீர்வைப் பெற்றுத்தந்தது அ.தி.மு.க-வும். அ.தி.மு.க. அரசும்தான்" என்றார். 

குமாரசாமி - மோடிஇதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி, பிரதமரைச் சந்தித்த பின் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். காவிரிப் பிரச்னையில் தீர்வு ஏற்பட்டு விட்டதாக அ.தி.மு.க அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்து, அரசின் சாதனைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், காவிரி ஆணையத்தை ஏற்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் காவிரி உரிமை மீட்பு வெற்றிவிழாவை அ.தி.மு.க. நடத்தியிருப்பது பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர், "காவிரிப் பிரச்னையில் ஒவ்வொரு நேரத்திலும் அ.தி.மு.க. இதுபோன்று வெற்றிவிழாக்களை நடத்துவது வழக்கம். ஒண்ணுமே இல்லாததற்கெல்லாம் விழா நடத்துவதே இவர்களின் வாடிக்கை. ஏற்கெனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதையே வெற்றிவிழா என்று சொன்னார்கள். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் மிகப்பிரமாண்டமான விழா நடத்தி, 'காவிரித் தாயே' என்றெல்லாம் பட்டம் வழங்கினார்கள். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டதால், அதை அரசிதழிலில் வெளியிட்டால் என்ன; வெளியிடாமல் போனால்தான் என்ன?

'நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் எங்களுக்குப் பொருத்தமில்லை. எங்களுக்குத் தண்ணீர் போதவில்லை. அதில் எங்களுக்கு நிறையப் பாதிப்புகள் இருக்கிறது' என்று அ.தி.மு.க-வும், தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குப் போயிருக்கும்போது, அதை அரசிதழில் வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், அப்போது ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள். 

ஒருபக்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்து விட்டு, இன்னொரு பக்கம் 'காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டது அ.தி.மு.க-வின் மகத்தான சாதனை; என்னுடைய வாழ்நாளில் இதைத்தான் சாதனையாகக் கருதுகிறேன்' என அப்போது ஜெயலலிதா சொன்னது எந்தவகையில் நியாயம்? எனவே, அரசிதழில் வெளியிட்டாலும், அது அமலாகாது என்பது அப்போதே ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனால், ஊர் முழுக்க அதை மிகப்பெரிய சாதனையாக அ.தி.மு.க. பிரபலப்படுத்திக் கொண்டது.

அதேபோன்று, இப்போது உச்ச நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்பு வந்துள்ளது. அந்தத் தீர்ப்பின் மீது இன்னும் முழுமையான முடிவு எட்டப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் பிரதிநிதிகளை நியமித்துள்ள போதிலும், கர்நாடகா சார்பில் பிரதிநிதிகள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. அண்மையில் மதுரை வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, 'பிரதிநிதிகள் நியமனம் இப்போதைய பிரச்னையில்லை' என்கிறார்.

பாலகிருஷ்ணன்

டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு கூறுகையில் அவர், 'காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். ஆணையத்தை ஏற்க முடியாது' என்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, ஆணையம் அமைத்து பிரதிநிதிகளை நியமிக்கக்கூடிய நேரத்தில் இப்போது மீண்டும் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்கிறார் அவர். நடைமுறையில் பார்த்தால், காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இன்னமும் தாமதப்படுத்தவே கர்நாடகா முயல்கிறது என்றுதான் தெரிகிறது. இதன்மூலம் இந்தப் பிரச்னையை அப்படியே கிடக்கட்டும் என்றுதான் கர்நாடகா நினைப்பதாகத் தோன்றுகிறது. 

இப்படியான சூழலில், காவிரிப் பிரச்னையில் இவர்கள் என்ன வெற்றியைக் கண்டுவிட்டார்கள்? காவிரி ஆணையம் அமைத்தாகி விட்டது. ஆணையத்தின் கூட்டம் நடத்தப்பட்டு விட்டதா அல்லது ஆணையம் தீர்ப்பு சொல்லி, தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிட்டதா? அப்படியென்றால், எதற்காக வெற்றி விளக்கக் கூட்டம் நடத்தியுள்ளனர். 

கர்நாடகாவைப் பொறுத்தவரை, மழை பெய்து கபினி அணை நிரம்பி விட்டது. அதற்கு மேல் அங்கு தண்ணீரைத் தேக்க முடியாது என்ற நிலையில், வேறு வழியில்லாமல் தானாக வந்த தண்ணீர்தான் வந்துள்ளதே தவிர, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை. ஆனால், அந்தத் தண்ணீரை தாங்கள்தான் பெற்றுத் தந்துள்ளோம் என்று கூறி, சாதனையாக்கிக் கொள்வதா? 

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்களே முதுகைத் தட்டிக்கொடுக்கும் நிலைதான். தங்களுக்குத் தாங்களே 'பேஷ்... பேஷ்...' பாராட்டிக் கொள்ள வேண்டியதுதான். இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிற இதுபோன்ற பிரச்னைகளில், நாங்கள் வெற்றிபெற்று விட்டோம் என்று சொல்லிக் கொள்வது மிகவும் தவறான நடைமுறை. மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில், அவர்களுக்கு அவர்களே பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்