அமைதிக்குப் பதிலாகப் பதற்றநிலையை அரசே உருவாக்குவது நியாயமல்ல! - பி.யூ.சி.எல் கண்டனம்

ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்களை அரசு அடக்க நினைப்பது

``ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்களை அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும்'' என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) கண்டனம் தெரிவித்துள்ளது.

முரளி

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் கண.குறிஞ்சி, மாநிலத் தலைவர் இரா.முரளி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் ``தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எனப் பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு காவல்துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக வசைபாடுவது போன்ற செயல்கள் செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கைதானவர்கள்மீது 20 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த 2 நாள்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. இதன் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் மனதில் உருவாக்கத்தான்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்மீது வழக்குகள் பதிவு செய்வது என்பது சட்டத்தை தவறான வழியில் அரசு பயன் படுத்துவதாகும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் மீது ஏற்கெனவே உள்ள பழியைத் தீர்ப்பது போலாகும். வீடீயோ பதிவுகளை வைத்து அதில் குரல் எழுப்பும் அனைவரையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது காவல்துறை. ஊரில் உள்ள ஆண்கள் ஊரைவிட்டே செல்லக்கூடிய கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிகிறது. நடந்த படுகொலைகளுக்காக அரசு தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, அரசு, போராடிய அப்பகுதி மக்கள் மீது தங்கள் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறது என்பது தெளிவாகிறது. 

தூத்துக்குடி மட்டுமின்றி, சேலத்தில் பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிய பியூஷ் மானுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதைக் கண்டிக்கிறோம். இம்மாதிரி மக்கள் நலன் சார்ந்த  ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே, தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கெனவே கைதானவர்கள்மீது மேலும் மேலும் வழக்குகளைப் புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தூத்துக்குடியில் பதற்றம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்கு பதிலாக அரசே பதற்றநிலையை அதிகரிக்கச் செய்வது நியாயமல்ல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமைவழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என பி.யூ.சி.எல் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!