நீதிமன்ற உத்தரவை மீறியதாக சி.பி.எம் மாவட்டச் செயலாளர் உள்பட 1,720 பேர் மீது வழக்கு பதிவு! | Police file case against 1,720 CPI (M) cadres in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:10:44 (20/06/2018)

நீதிமன்ற உத்தரவை மீறியதாக சி.பி.எம் மாவட்டச் செயலாளர் உள்பட 1,720 பேர் மீது வழக்கு பதிவு!

பொதுக்கூட்டம் நடத்திட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த வழிகாட்டு உத்தரவை மீறியதாகக் கூறி,  சி.பி.எம். கட்சியின், துாத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன் உட்பட 1,720 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டி, மாவட்ட காவல்துறை  அனுமதி மறுத்தது. உடனே, கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பேரணி மற்றும் பொதுக்கூடடம் நடத்த அனுமதிகேட்டு, வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவின்படி, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு பொதுக்கூட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளித்தது மாவட்டக் காவல்துறை. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு நேற்று (18.06.16) அக்கட்சியின் கண்டனப் பொதுக்கூட்டம் , மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. 

பொதுக்கூட்டம்

இக்கூட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், ``துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டவர்களை, சந்திக்க எங்கள் கட்சியின் அகில இந்தியச் செயலாளர், பிரகாஷ்கராத் வரும்போதே, நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அப்போது நிலவிய பதற்றத்தைக் காரணம் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, அமைதி திரும்பிய பின் கூட்டத்துக்கு அனுமதி கேட்டும் அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. அதனால், நாங்கள்  நீதிமன்றத்தை அணுகி, அனுமதி பெற்றோம். நீதிமன்றமும்,  மாவட்டத்தில் காலியான இடத்தில் கூட்டம் நடத்திக்கொள்ளலாம். கூட்டத்துக்கு, மாலை 6 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. 

கூட்டத்தில், பிருந்தா காரத், உ.வாசுகி ஆகிய இரண்டு சிறப்புப் பேச்சாளர்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படுகிறது. கூட்டத்துக்கு1,000 பேருக்கு மேல் வர அனுமதியில்லை. ஆரம்பம் முதல் கூட்டம் போலீஸாரால் பதிவு செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் வீதி மீறப்பட்டாலோ அசம்பாவிதம் ஏதும் நடந்தாலோ  கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் பொறுப்பேற்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது. ஒரு தேசிய கட்சிக்கு தங்களின் கருத்தைச் சொல்ல நீதிமன்றம் இத்தனை நிபந்தனைகளை விதித்துள்ளது" என்றார்.

இந்தக் கண்டன பொதுக்கூட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், அர்ச்சுணன் மீது தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலை மீறி அதிகமான மக்களை கூட்டியதற்காக, ஐ.பி.சி., 188-வது பிரிவின் கீழ், அர்ச்சுணன் உட்பட, 1,720 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க