வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:09:16 (20/06/2018)

சுருக்குமடி வலைகளுக்கு அனுமதி மறுப்பு..! கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் போராட்டம்

மீனவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இதன் காரணமாக அந்த வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை

கடலூரில் சுருக்குமடி வலை பிரச்னையில் மீனவர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் இன்று முதல் காலைவரையாற்ற  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. கிராமத்திலும் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கடலூர்

மீன் பிடித் தடைக்காலம்  கடந்த 14-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து  கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில், சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீனவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இதன் காரணமாக அந்த வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

இதுதொடர்பாக கடந்த 16-ம் தேதி அமைச்சர் சம்பத்திடம் மீனவர்கள் மனு அளித்தனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் பிரநிதிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 20 மீனவர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளக் காத்திருந்தனர். பின்னர் அமைச்சர் சம்பத் அவர்களுடன் சந்தித்துப் பேசினார். மாவட்ட ஆட்சியர்  தண்டபாணி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் சுருக்குமடி வலை தடையை நீக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், துறை அமைச்சரிடமும் பேச வேண்டும். அதனால் 2 நாள் அவகாசம் வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து மீனவர் 2 நாள்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் காத்திருக்கப் போவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர் கிராமத்தினர் கூட்டம் நடந்தது. அதில் சுருக்குமடி வலையை அனுமதிக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, கிராமத்தில் கறுப்புக் கொடி கட்டுவது, படகுகளுக்கு கறுப்பு கொடி கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் கடலூர் தேவனாம்பட்டினம் முதுநகர் மீனவர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவனாம்பட்டினம் பகுதியில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.