`காவிரி நாயகன்' எடப்பாடி பழனிசாமி..! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புகழாரம்

 ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்., காவிரி நாயகன் எடப்படியார்

`ஜல்லிக்கட்டு நாயகன்' ஓ.பி.எஸ், `காவிரி நாயகன்' எடப்படியார் என்று புகழ்ந்து பேசி தொண்டர்களை நெளிய வைத்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். 

மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜு தலைமையில் நேற்று இரவு நடந்த காவிரி நதி மீட்புப் போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டத்தில்  மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, ``மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்ததே அ.தி.மு.க ஆட்சிதான். காவிரி பிரச்னையில் கலைஞர் 1969-ல் புதிய ஒப்பந்தம் போடவில்லை. கருணாநிதி தூங்கிவிட்டார். அதற்குள் கர்நாடகாவில் 12 அணைகள் கட்டினார்கள். சுப்ரீம் கோர்டில் வழக்கு தாக்கல் செய்து சட்டப்போராட்டம் நடத்தி அதை கெஸட்டில் பதிவு செய்ய வைத்தார் ஜெயலலிதா. இந்த வருடம் 200 டி.எம்.சி. கொடுப்பேன் என்று குமாரசாமி சொல்றாரு, தமிழகத்தின் உரிமை பறிபோய் விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.  உரிமையை விட்டவர்களே அவர்கள்தானே.

காவிரி நாயகன்

ஸ்டெர்லைட் மூடப்படும் என்ற நிலையை உறுதியாக எடுத்தது எடப்பாடி அரசு. தமிழகம் தொழில் வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது.  தொழில் செய்ய 1,320 மகளிர் குழுக்களுக்கு தலா பத்து லட்ச ரூபாய் வழங்க உள்ளோம். எங்கள் ஆட்சியில் ப்ளஸ் டூ முடித்தவர்கள் 100 க்கு 48 பேர் கல்லூரிக்குச் செல்கிறார்கள்.

தி.மு.க ஆட்சியில் 26 பேர்தான். கூட்டுறவுத்துறையில் அதிக சேமிப்பு உள்ளது தமிழகத்தில்தான். இரண்டு வருடத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று சிலிகுரியில் இருந்துகொண்டு ஒருத்தரும், அமெரிக்காவில் இருந்துகொண்டு ஒருத்தரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது முதல், களவு போன ராஜராஜன் சிலையை மீட்டு வந்தது வரை எடப்படியார் ஆட்சியில் நடந்துள்ளது. `ஜல்லிக்கட்டு நாயகன்' என ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பெயர் வந்ததுபோல் `காவிரி நாயகன்' என எடப்பாடி பழனிசாமிக்கு பெயர் வந்துள்ளது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!