வெளியிடப்பட்ட நேரம்: 05:18 (20/06/2018)

கடைசி தொடர்பு:08:36 (20/06/2018)

தமிழ்வழிக் கல்வியில் பயின்ற நெய்வேலி பள்ளி மாணவிக்கு காமராஜர் விருது..!

என்எல்சி இந்தியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியா தமிழ் வழியில் கல்வி பயின்று, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி தமிழக அரசின் கல்வித்துறை அவருக்கு காமராஜர் விருது வழங்கியுள்ளது.

என்.எல்.சி இந்தியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியா தமிழ் வழியில் கல்வி பயின்று, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்,  சிறப்பான மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி தமிழக அரசின் கல்வித்துறை அவருக்கு காமராஜர் விருது வழங்கியுள்ளது.

பள்ளி மாணவர்கள்

ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவமணிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு, ரொக்கப் பரிசு வழங்கி வருகிறது. இப்பரிசானது, மாணவ மாணவிகள், அரசுப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் அவர்களது இதரத் திறமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, வழங்கப்பட்டு வருகிறது. 2016-17ம் கல்வியாண்டுக்கான இந்தப் பரிசு, மாவட்டம் தோறும் 15 மாணவமணிகளைத் தேர்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. 

இந்த 15 மாணவர்களில், நெய்வேலி என்.எல்.சி இந்தியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயின்ற முருகன் மகள் பிரியா என்பவரும் ஒருவர். இம்மாணவி, 2016-17-ம் கல்வி ஆண்டில், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1110 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு பள்ளி இறைவழிப்பாட்டுக் கூட்டத்தில் நேற்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில்  என்.எல்.சி  இந்தியா பள்ளிகளின் செயலாளர் நெடுமாறன் கலந்துகொண்டு மாணவியைப் பாராட்டிப் பேசியதுடன், மற்ற மாணவிகளையும் ஊக்கப்படுத்தினார்.

பள்ளித் தலைமையாசிரியை ராஜலட்சுமி மாணவிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். தமிழக அரசு வழங்கிய ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை மாணவிக்கு, என்.எல்.சி. பள்ளிகளின் செயலாளர் மற்றும்  தலைமையாசிரியை வழங்கினர். உதவி தலைமையாசிரியைகள், ஆசிரியர்கள், மாணவிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.