மரத்தடியில் படித்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது விஷத்தைக் கக்கிய பாம்புகள்..! புதுக்கோட்டையில் பரபரப்பு | Government school students suffer by snake poison

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:10:11 (20/06/2018)

மரத்தடியில் படித்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது விஷத்தைக் கக்கிய பாம்புகள்..! புதுக்கோட்டையில் பரபரப்பு

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மரத்தடியில் படித்த மாணவர்கள் மீது பாம்புகள் விஷம் கக்கியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது குப்பத்துப்பட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். அதில் 5-ம் வகுப்பு மாணவ மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அப்போது, மரத்தின் மேலிருந்து திரவம் ஒன்று வடிந்து மாணவிகள் மீது விழுந்துள்ளது. அதனைத் துடைத்த மாணவிகள் மரத்தின் மேல் அண்ணாந்து பார்த்தபோதுதான், மரத்தில் மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த மாணவர்கள் பயத்தில் கத்தினர். அப்போது, மூன்று பாம்புகளும் பின்னிப் பிணைந்து ஒன்றொடொன்று சண்டையிட்டு விளையாடியபடி விஷங்களைத் துப்பியது தெரியவந்தது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், மணிமேகலை, பாண்டிமீனா, மகேஸ்வரி, சிவஜோதி, கனிஸ்கா உள்ளிட்ட 5 மாணவிகளுக்கு அரிப்பு, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, மாணவர்கள் மீது விழுந்த திரவம், விஷமாக இருக்கலாம் என்கிற அச்சத்தில் மாணவர்களை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மருத்துவமனையில் மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிகளின் உடல்நிலை குறித்து பயப்படும்படியாக ஏதும் இல்லை. அவர்கள் நலமுடன் இருப்பதாகக் கூறியதுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன், துணை ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்டோர் மருத்துவனையில் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், நேற்று மாலை மாணவிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பயப்படும்படியாக ஒன்றுமில்லை என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவிகள் மரத்தடியில் பாடம்படிக்கவில்லை, விளையாடிக் கொண்டிருந்தார்கள் எனக் கல்வித்துறை அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

விராலிமலை எம்.எல்.ஏவும் அமைச்சருமான விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ராப்பூசல் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் மரத்தடியில் படித்ததால், பாம்புகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க