வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:07:14 (20/06/2018)

பெரியதாழை தூண்டில் வளைவில் ஆட்சியர் ஆய்வு..!

பெரியதாழை கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவின் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற மீனவர்களின் வேண்டுகோளின் படி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையைச் சுற்றிலும் 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்தக் கிராமங்களில் அடிக்கடி கடல் அரிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வீடுகளும், படகுகளுக்கும் அதிகம் சேதம் ஏற்படுகின்றன. 

இதனால் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி,  கடந்த வருடம் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.  இந்தத் தூண்டில் வளைவு கடலின் மேற்குப் பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவிலும், கிழக்குப் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், கிழக்குப் பகுதியில்தான் கடல் சீற்றம் அதிமாக காணப்படுகிறது என மீனவர்கள் கூறுகின்றனர். அதனால் இப்பகுதியில் கடல் சீற்றத்தைத் தடுக்க, மேற்குப் பகுதியில் 800 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவைப் போலவே, கிழக்குப் பகுதியிலும் 800 மீட்டர் தொலைவுக்கு, தூண்டில் வளைவு அமைக்க, மீனவர்கள் கோரிக்கை  விடுத்தனர். இதுகுறித்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இத்தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதனுடன் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் மனு அளித்தனர். இதன்படி, பெரியதாழை கடல் பகுதியில் துாண்டில் வளைவு விரிவாக்கம் செய்வது பற்றி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மீனவர்கள் தூண்டில் வளைவுப் பாலத்தின் தூரத்தை அதிகரிக்கக்கோரி அளித்த மனுவின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு அனுப்பப்படும். விரைவில் தூண்டில் வளைவு தூரம் அதிகப்படுத்தும் பணி நடைபெறும்' என்றார். அத்துடன் ஆட்சியரிடம், இப்பகுதியில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க