வெளியிடப்பட்ட நேரம்: 06:59 (20/06/2018)

கடைசி தொடர்பு:16:16 (20/06/2018)

``வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தைத் திருடுது!” - சேலம் நிலவரம்

``வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தைத் திருடுது!” - சேலம் நிலவரம்

சேலம் - சென்னைக்கு இடையே 8 வழி பசுமைச் சாலை 10 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ளது. இந்தச் சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டத்தின் வழியாக 277 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படவிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் அரியானூரில் தொடங்கி, பூலாவரி, பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, எருமாபாளையம், உடையாப்பட்டி, சின்னக்கிருஷ்ணாபுரம், பெரியகிருஷ்ணாபுரம், மின்னாம்பள்ளி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைப்பட்டி என சேலத்தின் எல்லையான மஞ்சவாடி கனவாய் வரை 36.3 கி.மீட்டர் சேலம் மாவட்டத்தில் மட்டும் பயணிக்கிறது.

இந்த 8 வழி பசுமைச் சாலையில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த சேலம் மாவட்ட வருவாய்த் துறை 5 யூனிட்டுகளாக பிரித்து 5 சிறப்பு வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு நில அளவை செய்யப்படுகிறது.   

சென்னை சேலம் 8 வழிப்பாதை

கடந்த 18ம் தேதி பசுமைச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்த நில அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணி சேலத்தின் எல்லைப் பகுதியான மஞ்சவாடி கனவாய் பகுதியிலிருந்து தொடங்கி அடிமலைப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் வரை அளவீடு செய்யப்பட்டது.  இப்பகுதியில் சிறப்பு வட்டாட்சியர் வெங்கடேசன்  தலைமையில் வருவாய்த் துறை ஊழியர்களும், சேலம் வடக்குச் சரக உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.

நில அளவீடு செய்யப்பட்ட சேர்வராயன் மலை அடிவாரப் பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்பட்டது. விவசாயிகள் விளை நிலங்களில் நெல் நாற்று நட்டுக் கொண்டும், களை எடுத்துக்கொண்டுமிருந்தார்கள். காவல்துறை குவிக்கப்பட்டிருந்ததால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் முடங்கினர். அடிமலைப்பட்டியில் 11 விவசாயிகள் தங்கள் நிலங்களில் நில அளவீடு செய்யக் கூடாது என்று நிலத்தில் படுத்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை உருவானதால் நில அளவீடு விரைந்து நடத்தப்பட்டது.

அரவிந்த்குமார்ராமாக்காள்

ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார், ``இந்த நிலத்தையும், கிணற்றையும் பாருங்க. இந்த நிலம் மூன்று போகம் விளையக்கூடிய நிலம். வருடம் முழுக்க வற்றாத கிணறு. வறட்சியான காலத்தில் கூட 7 அடியிலேயே தண்ணீர் இருக்கும். சேர்வராயன் மலைப் பகுதியையொட்டி இருப்பதால் எப்போதும் பச்சை பசேல் என்று இருக்கும். இப்படிப்பட்ட நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள். நாங்கள் அரசிடம் இழப்பீட்டுத் தொகை வாங்கிய பிறகுதான் இந்த நிலம் அரசுக்குச் சொந்தம். அதுவரை எங்களுக்குச் சொந்தம். எங்களிடம் கேட்காமலேயே விளை நிலத்துக்குள் புகுந்து அளவீடு செய்கிறார்கள். எதுவும் பேச முடியவில்லை. மீறிப் பேசினால் உடனே கைது செய்கிறார்கள். போலீஸ் படையைக் காட்டி மிரட்டுகிறார்கள். இது ஜனநாயக நாடா சர்வதிகார நாடா என்று தெரியவில்லை'' என்றார்.

ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் தனிமையில் உக்கார்ந்து தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்த ராமக்காள், ``வாழையடி வாழையாக வாழ்ந்த இடம் எல்லாம் போச்சு. விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது. இனி எதை நம்பி வாழ முடியும். எங்க உசுரக் கொடுத்து இந்த விவசாய பூமியை உருவாக்கியிருக்கிறோம். காய்ச்ச காலத்தில் விலைக்குத் தண்ணீர் வாங்கி ஊற்றி இந்தத் தென்னைப் பிள்ளைகளை வளர்த்திருக்கிறோம். இப்ப எல்லாத்தையும் பிடிங்கிட்டு துரத்தி விடுறாங்க. இந்த மாடு கன்றை கூட்டிட்டு எங்க போக முடியும்.
ரோட்டில் நடந்து போகும் போது வழிப்பறி கொள்ளையன் செயினைப் பிடிங்கிட்டு போவதைப் போல இந்த அரசாங்கம் இப்ப எங்க வீட்டையும், நிலத்தையும் பட்டப் பகலில் கொள்ளை அடிச்சுட்டுப் போறாங்க. இதை கேட்க யாரும் இல்லையா? வாய் விட்டு அழுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லை. ஆதங்கப்பட்டுக் கதறினா கூட கைது பண்ணிட்டுப் போயிடறாங்க. இனி எங்களால் வாழ முடியாது'' என்று தேம்பி தேம்பி அழுதார்.

வெங்கடேஷ்

ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் நில அளவீடு மாறியிருப்பதாகச் சொல்லி சிறப்பு தாசில்தார் வெங்கடேஷனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையடுத்து தமிழரசனிடம் பேசிய போது, ``சார் பத்து நாள்களுக்கு முன்பு நில அளவீடு செய்து முட்டுக்கல் போட்டார்கள். அப்போது 1/2 ஏக்கர் பாதிக்கப்பட்டது. தற்போது புதியதாக நில அளவீடு போடுகிறார்கள். அதனால் எங்க 2 ஏக்கர் முழு நிலமும் பறி போகிறது.

8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்ற போது அடுத்த மாதம் 10 தேதி அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள அன்னை கஸ்தூரி பாய் மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும். அதுவரை நிலத்தில் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று கூறினார்கள். அதற்கிடையே இன்று காவல்துறை குவிக்கப்பட்டு அராஜக முறையில் புதிய நில அளவீடு செய்கிறார்கள். மக்களுக்கான திட்டம் என்றால் நாங்களும் மக்கள்தானே. எங்களிடம் கருத்துகளை கேட்டு விட்டு இந்தப் பணிகளைச் செய்யலாம்'' என்றார்.

காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட ஒருவர், ``நான் என்ன தவறு செய்தேன். என்னை எதற்காக கைது செய்தார்கள்? என்னுடைய 3/4 ஏக்கர் நிலத்தைப் பறிக்கிறார்கள். நான் தடுத்து நிறுத்த முடியாமல் கையறு நிலையில் நின்று கொண்டிருந்தேன். டி.வி.காரங்க பேட்டி கேட்டாங்க. கொடுத்தேன். பேட்டி கொடுத்தது தவறா? டி.வி.யில் பேட்டி கொடுக்கக் கூடாது என்று கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் வைத்திருந்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் இப்போதுதான் வெளியே விட்டார்கள்'' என்றார்.  

இதைப்பற்றி 8 வழிச் சாலைக்கு நில அளவை செய்யும்  சிறப்பு வட்டாட்சியர் வெங்கடேஷன், ``அரசு மக்கள் திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் பயன்பாடுகளைப் பற்றி முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம்  தெரிவித்திருப்பதோடு அவர்களுடைய ஆட்சேபனை மனுக்களையும் பெற்றிருக்கிறோம். அதையடுத்து நில அளவைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்