வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (20/06/2018)

கடைசி தொடர்பு:09:39 (20/06/2018)

அந்த ஆலமரமும்.. வாச்சாத்திப் பெண்களின் அலறலும்! அரசு கோரப்பிடியின் 26 ஆண்டுகள் #26YearsOfVachathi

வாச்சாத்தி

ரு மாலை நேரம்... நம் தெருவுக்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், வனத் துறையினர், வருவாய்த் துறையினர் நம் அனைவரையும் தெருவின் மிகப் பெரும் ஆலமரத்தின் அடியில் கூடி நிற்க வைக்கிறார்கள், நம் வீடுகளை ஏற்கெனவே அடித்து உடைத்துப் போட்டு விட்டார்கள், நம் உணவுப் பொருள்களில் கண்ணாடித் துகள்களைக் கலந்துவிட்டார்கள், ஏனென்று கேள்வி கேட்பவர்களை அடித்துப் போடுகிறார்கள்... ம்ஹும்... இதெல்லாம் எப்படி நடக்கும்? நிகழ வாய்ப்பேயில்லை அல்லவா? ஆனால், வாச்சாத்தி என்ற இடத்தில் நடந்தது! 

வாழ்வாதாரத்துக்கான பல்வேறு வாய்ப்புகளும், அரசின் அத்தனை ஆதரவுகளும், சலுகைகளும், உரிமைகளும் கிடைக்கப் பெறாதவர்கள் அவர்கள். வனத்தின் அருகில், மலையின் அடிவாரத்தில் நிலத்தைப் பண்படுத்தி, உழுது தம் அன்றாட பொழுதினைக் கழிப்பவர்கள், உடனடித் தேவைகளுக்குக் கூட பல கிலோமீட்டர்கள் கடந்து நகரத்துக்கு வருபவர்கள். அவர்களுக்குதான் இந்தக் கொடுமைகள் நிகழ்ந்தன. வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் மா, பெரு, சிறு, குறு நகரங்களில் வசிக்கும் நம் போன்றோருக்கு இந்த ஒடுக்குமுறைகள் நிகழ்ந்திருந்தால், நடந்திருப்பதே வேறு. ஆனால், வெளியுலகுக்கு அந்த மலை வாழ் மக்களைக் குறிவைத்து இப்படி ஒரு வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிய வருவதற்கே கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. அதுவரை அந்த மக்கள் உயிருக்குப் பயந்து மலையில் மறைந்திருந்தார்கள். 

சம்பவம் நடந்துமுடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை அவர்களின் கண்ணீர் நீதியின் காதுகளில் விழவே இல்லை. அவர்களுக்கான நீதி 19 வருடங்களுக்குப் பிறகு பலப் போராட்டங்களை, ஒடுக்குமுறைகளை, கொலை மிரட்டல்களைத் தாண்டி கிடைத்து. ஏனென்றால், அவர்கள் மலை வாழ் மக்கள், பொது சமூகத்தின் பார்வையிலிருந்து ஓரம் தள்ளப்பட்ட மக்கள். ஆனால் இன்று, அவர்கள் போராளிகள்! தங்களுக்கான நீதியை அரசின் அதிகாரப் படிகளில் போராடி, ஏறி வந்து பெற்றிருப்பவர்கள். வாச்சாத்தி மக்கள்! வாச்சாத்தியில் பொதுச் சமூகம் கட்டமைத்த வேற்றுமைப் படிநிலைகள், அதிகாரக் குவியலுடன் இணைந்து நடத்திய வெறித் தாண்டவம் நிகழ்ந்து இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன.

1992, ஜூன் 20 அன்று காலை வேளையில், கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகளைத் தேடி வந்த வனத்துறையினர், வாச்சாத்தியில் ஒரு விவசாயியின் களத்தின் அருகில் சில சந்தனக் கட்டைகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அருகில் தன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் சொல்ல, அந்த விவசாயியின் மீது பட்பட் என வனத்துறை அதிகாரி செல்வராஜின் அடி விழுகிறது. வலியில் கதறும் விவசாயியின் குரல் கேட்டு வாச்சாத்தி கிராம மக்கள் திரண்டிருக்கிறார்கள். கைகலப்பு ஏற்படவே அதிகாரி செல்வராஜ் காயமடைகிறார். உடனே கிராம மக்கள் முதலுதவி செய்ததுடன் அவருக்கு ஒரு மாட்டுவண்டி ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள், அன்று மதியம் நடக்கப்போகும் சம்பவத்தை அறியாமல். 

வாச்சாத்தி

காவல் துறையினர், வனத் துறையினர், வருவாய்த் துறையினர் என்று சுமார் 300 பேர் வாச்சாத்தியில் குவிகின்றனர். கபளீகரம் தொடங்குகிறது. அன்று மாலையில் கிராம மக்களின் உடைமைகள் அனைத்தையும் உடைத்து, அழித்துப் போட்ட பிறகு மக்களை ஓர் ஆலமரத்தின் அடியில் குவிக்கிறார்கள். கூடியிருந்த மக்களிலிருந்து 18 பெண்களை வனத்துறையினர் தனிமைப்படுத்தி, அவர்களைக் கூட்டாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உள்ளடக்கிய கிராம மக்கள் 217 பேரை வனத்துறை அலுவலகத்துக்கு இழுத்துச் சென்று... அங்கே மனித மனம் சிந்திக்கக் கூடிய வக்கிரத்தின் எல்லா எல்லைகளையும் தொட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அடுத்த நாள் காலை மறுபடியும் வாச்சாத்திக்கு சென்றிருக்கின்றனர் வனத்துறையினர். வன்முறையில் இருந்து தப்பித்த கிராம மக்கள் பலரும் உயிருக்குப் பயந்து மலைகளில் தலைமறைவானார்கள்.

கிராம மக்களின் மீது 'சந்தனக் கடத்தல்' என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மலை வாழ் மக்கள் சங்கத்தினருக்கு ஜூலையின் முதல் வாரத்தில்தான் இந்த செய்தி தெரியவந்தது. அவர்கள் வாச்சாத்தியை வந்து பார்க்கும்போது அங்கு யாருமே இல்லை. மலைகளில் ஒடுங்கியிருந்த மக்கள் அதன்பின் கீழிறங்கி வந்திருக்கிறார்கள். நடந்த கொடுமையின் முழு பரிமாணமும் அப்போதுதான் வெளியே தெரிந்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட மக்களுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி பெயில் கிடைத்தது. தொடர்ந்து மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். அப்போதைய வனத் துறை அமைச்சர் செங்கோட்டையன், வச்சாத்தி மக்கள்தான் அரசு அதிகாரிகள் மீது வன்முறையை ஏவி விட்டதாகவும், அவர்கள் அனைவரும் நாளொன்றுக்கு சந்தனத்தைக் கடத்துவதன் மூலம் 500 ரூபாய் சம்பாதிப்பதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லசிவன் அதிகாரிகள் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கருத்து தெரிவித்தார். 

வாச்சாத்தி

நீதி வேண்டி கடைசியாக 18 பெண்களும் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்க முனைந்தனர். அந்த வழக்கையும் காவல் நிலையத்தில் பதிவதிலேயே தடைகள் எழுந்தது. உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுக்க, அது தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு நடுவில் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி, வாச்சாத்தியில் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 'பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை' எனவும், கிராம மக்கள் அவர்களே தங்கள் உடைமைகளை சேதப்படுத்தி, அரசுத்துறையினர் மீது பழி போடுவதாகவும் கூறியது. 

உச்ச நீதிமன்றம் வாச்சாத்தி மக்களுக்கு செவிசாய்த்தது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஏற்கப்பட்டு வழக்கு நடைமுறைகள் தொடங்கின. வழக்கைத் தாமதப்படுத்த எல்லா வகையிலும் முயற்சிகள் நடந்தன. குற்றம்சாட்டப்பட்ட அரசுத் துறையினர் பலமுறை நீதிமன்றம் வருவதைத் தவிர்த்தனர். அறிக்கை சமர்ப்பிப்பதில் கால தாமதம் ஆனது. இறுதியில் வழக்கு சி.பி.ஐ கைக்கு மாறியது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், நீதிமன்றம் சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகும் வழக்கைத் தாமதப்படுத்த எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடையாள அணிவகுப்புக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் வரவில்லை. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து அதன் பின்பு அடையாள அணிவகுப்பு நடந்தது. வாச்சாத்தி பெண்கள், குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள். 269 அரசுத் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்பு 6 வருடங்கள் வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒத்துழைப்பின்றி வழக்கு நீண்டுகொண்டே போனது. இந்த நிலையில், சந்தனக் கடத்தல் மேற்கொள்ளும் கடத்தல்காரர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ``பெரும்பாலான வாச்சாத்தி மக்கள் நிலமற்றவர்கள், அவர்கள் சந்தனக் கட்டைகளைக் கடத்தியிருந்தாலுமே பின்னணியில் உள்ள கடத்தல் தொழில் பெருமுதலாளிகளைத் தண்டிக்க வேண்டுமே ஒழிய இவர்களைத் தண்டிப்பது சரியாகாது" என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாச்சாத்தி

இறுதியில், 19 வருடங்கள் கடந்த பிறகு குற்றம்சாட்டப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது.  அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வெளிவந்தபோது 269 பேரில் உயிரோடு இருந்தவர்கள் 215 பேர்! வழக்கு நடந்த காலத்திலேயே 54 பேர் இறந்து போயிருந்தனர். அந்த 215 பேருக்கும் தண்டனைகளும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ பங்கு மிக முக்கியமானது. வழக்கு நடந்த காலம் முழுவதும் வாச்சாத்தி மக்களுடன் இணைந்து நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலை வாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த நல்லசிவன், சண்முகம் போன்றோரின் ஆதரவும் அளப்பரியது. இந்தப் போராட்டம் ‘வாச்சாத்தி - உண்மையின் போர்க்குரல்’ என்ற பெயரில் ஆவணப்படமாக வெளிவந்திருக்கிறது. 

சமூகத்தின் ஒரு பக்கத்துக்குத் தள்ளிவைக்கப்பட்ட, பொதுச் சமூகம் மறந்த மக்கள் அல்லவா இவர்கள்! நம் மறதியின் அடிப்படையில்தான் அதிகாரக் குவியல் சாதி வெறியுடன் சேர்ந்து இந்த கொடுமையை நிகழ்த்தியது. 'இவர்களின் மீது கை வைத்தால், கேட்பதற்கு யாருமில்லை' என்ற நம் மறதி கொடுத்த தைரியம்தான் இந்த வன்முறையை நிகழ்த்தும் தெம்பை அரசின் கரங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வன்முறைக்கு வாச்சாத்தி மக்கள் கொடுத்த பதில் இன்று அவர்களைப் போராளிகளாக்கி இருக்கிறது, சமூக மாற்றங்களைத் தூண்டுபவர்களாக மாற்றியிருக்கிறது.  

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களில் சிலர் இன்று மலை வாழ் மக்கள் சங்கத்திலும், அரசியலிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மையில் பெருமகிழ்ச்சி ஊட்டுவது இதுதான். மிதிக்கப்பட்ட, வலி சுமந்த மக்கள் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மால் ஒடுக்கப்பட்டவர்கள் காயம் கடந்து முன்வருகிறார்கள், கரம் பிடிக்க நாம் தயங்குகிறோம். வாச்சாத்திக் கொடுமை நடந்து 26 வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், இன்னமும் தொடரும் சாதி ரீதியிலான வன்முறைகள் நடுவில் தொக்கி நிற்கும் 26 வருடங்கள் அர்த்தமில்லாமல் போயிருக்கிறது. ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான சட்டச் சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் பல நூறு மடங்கு அதிகரித்திருக்கின்றன. சமூக வேறுபாடுகள் தொடர்ந்து வாச்சாத்திக் கொடுமைகளை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கின்றன. பல நூற்றாண்டு கால வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க சாதி வேறுபாட்டின் சாயம், தலைமுறை தலைமுறையாய் நெஞ்சங்களுக்கு இடையே பரவுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்