வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (20/06/2018)

கடைசி தொடர்பு:09:52 (20/06/2018)

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆளுநர் ஆட்சிக்கு குடியரசு தலை ஒப்புதல்

ஜம்மு - காஷ்மீரில் அம்மாநில அரசுக்கு வழங்கிய ஆதரவை பா.ஜ.க திரும்பப் பெற்றதால், அம்மாநில முதல்வரான மெஹபூபா முஃப்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2015 -ம் ஆண்டில் கூட்டணி ஆட்சியாக அமைந்த அரசு நேற்று கலைந்தது. ஜம்மு- காஷ்மீரில் பா.ஜ.க-வுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இதையடுத்து காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சிக்கு தனது ஆதரவை வழங்குமா என்ற கேள்வி எழுந்தது? ஆனால், அந்தத் தகவலைக் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 

இதனால் அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு  ஆளுநர்  ஆட்சியை அமல்படுத்த நேற்று பரிந்துரை செய்தார். இந்நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர்  ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டார். இதனால், அம்மாநிலத்தில் உடனடியாக ஆளுநர்  ஆட்சி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் 8-வது ஆளுநர் ஆட்சி இதுவாகும். இதனால் தற்போது அம்மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.