வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (20/06/2018)

கடைசி தொடர்பு:11:02 (20/06/2018)

நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து!

நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்ட் டூ எண்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர்  இல்லாத எண்டு டு எண்டு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அரசு பேருந்து

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் பஸ்கள் இருப்பிடத்தைக் கண்டறியும்  ஜிபிஎஸ், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வழி உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகிறது. விபத்துகளை தவிர்க்கும் வகையிலும் முன் செல்கிற வாகனங்களில் மோதுவதைத் தவிர்க்கும் வகையில் தானியங்கி, ‘பிரேக்’ வசதியும், தூக்க கலக்கத்திலோ அல்லது கவனகுறைவாகவோ ஓட்டும்போது டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து பஸ் விலகி ஓடினால் எச்சரிக்கை செய்யும் ‘அலாரம்’ அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்துக்கு சுமார் 52 புதிய பஸ்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் வர உள்ளன. இந்தப் பேருந்துகள் கண்டக்டர்கள் இல்லாமலே இயக்கப்பட உள்ளன.

அரசு பேருந்தில் உள்ள அவசர கால வழி

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருப்பதி, சென்னை போன்ற நகரங்களுக்கு கர்நாடகா அரசு பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இடைநில்லா பேருந்து என்பதால் கண்டக்டர் தேவையில்லை. அதிலும் தானியங்கி கதவை இயக்கும் பட்டன் டிரைவரிடம் இருப்பதால் அவர் அனுமதி இல்லாமல் யாரும் ஏறவோ, இறங்கவோ முடியாது என்பதால், இந்தத் திட்டம் சாத்தியப்படும். நாகர்கோவில் - திருநெல்வேலி  செல்லும் எண்டு டு எண்டு பஸ்களில் வடசேரி பஸ்ஸ்டாண்டிலேயே பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி விடுகின்றன. இந்த பஸ்களுக்கான டிக்கெட்டுகள் பஸ் நிலைய சிறப்புக் கவுன்டரில் வழங்கப்படும். சோதனை  முறையில் 2 பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும். பின்னர் பயணிகளின் வரவேற்பு மற்றும் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" என்றார்.