உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்!

பத்திரிகையாளர்கள் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகர் இன்று காலை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

எஸ்விசேகர்

நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் எஸ்.வி.சேகரின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர், முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் ஆஜரானார்.

இதனிடையே, நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது வரும் ஜூலை 12-ம் தேதி ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என எஸ்.வி.சேகரை நீதிபதி எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!