ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா!

``எது பிறக்கிறதோ, அது பிறக்கும்போது மூன்று கடமைகளைக் கொண்டதாகப் பிறக்கிறது, பெரியவர்களுக்கு உபசரிப்பையும், தெய்வங்களுக்கு பூஜைகளையும், பித்ருக்களுக்கு வம்சத்தையும் அது  அளித்தாக வேண்டும்” என்று வேதத்தின் அங்கமான தைத்ரிய சம்ஹிதை அறிவிக்கிறது.

பிறக்கும் எல்லா உயிர்களின் கடன்களையும் தீர்க்கவல்ல ஆலயம் என்று பூவுலக உயிர்கள் வணங்கி ஏத்தும் இடமாக சிதம்பரம் இருந்து வருகிறது. ஆடல்பெருமானின் விருப்பத்துக்குரிய தலமாக தில்லை இருந்து வருகிறது. பொன்னம்பலத்தில் வியாக்ரபாத முனிவருக்காக ஆனந்த தாண்டவம் ஆடிக்காண்பித்த எளியோர்க்கு எளியோனான ஈசன், தனது ஆடலின் வழியே ஐந்து வகை தொழில்களையும் நடத்தி வருகிறான் என்பது ஐதீகம். இடையறாது ஆடிக்கொண்டே இந்தப் பிரபஞ்சத்தை இயக்கி வரும் பெருமானுக்கு இந்த ஆனித் திருமஞ்சன நாள் சிறப்பானது என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். இன்றைய தினம் தொடங்கி நாளை சூரிய உதயம் (3.30a.m.To 6.00a.m) வரை ஆனித் திருமஞ்சனத் திருவிழா நடைபெற உள்ளது. 

திருவிழா

ஆடல்வல்லானை குளிர்விக்கவென்றே ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் நடராஜ அபிஷேகத்தில் ஆனி உத்திர அபிஷேகம் சிறப்பானது. சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் உச்சி காலத்திலும், ஆவணி மாத சதுர்த்தசி திதியன்று சாயரட்சை காலத்திலும், புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் நள்ளிரவிலும், மாசி மாத சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் ஆனி உத்திர நாளில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆனித் திருமஞ்சன நாளில் விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என்று 36 வகையான அபிஷேகப் பொருள்களைக்கொண்டு ஈசனுக்குக் குளிரக் குளிர அபிஷேகிப்பார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்கள் வாழ்வும் அப்படிக் குளிர்ந்து மகிழ்ச்சி பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு. இன்றைய தினம் தொடங்கி நாளை சூரிய உதயம் (3.30a.m.To 6.00a.m) வரை ஆனித்திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. சிவாலயங்களில் மட்டுமின்றி இந்நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும் என்பது சிறப்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!