வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (20/06/2018)

கடைசி தொடர்பு:11:39 (20/06/2018)

கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்! சிக்கிக்கொண்ட பாதிரியார்

வங்கியில் கடனே வாங்காத 6 விவசாயிகளுக்கு 2014-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் கடன் தொகை 5 லட்சம் ரூபாயை உடனே செலுத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. விவசாயிகள் பதற்றத்துடன் வங்கியில் சென்று விசாரித்த பிறகுதான் மோசடி விவகாரம் வெளியே வந்தது.

விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிரியார் தாமஸ் பீலியானிக்கல் கைது செய்யப்பட்டார்.
 

வங்கிக் கடன் - பாதிரியார் தாமஸ் பீலியானிக்கல்

 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு விகர்சன சமிதி செயல் இயக்குநராக இருந்தவர் பாதிரியார் தாமஸ் பீலியானிக்கல். குட்டநாடு பகுதியில் விவசாயிகளைச் சேர்த்து குழுக்களை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவுவதுபோன்று செயல்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் விவசாயிகளுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் தாமஸ் பீலியானிக்கல் மீது 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் சில வழக்குகளில் அவர் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அதில் 4 வழக்குகளில் ஆலப்புழா போலீஸாரால் தாமஸ் பீலியானிக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ``வங்கியில் கடனே வாங்காத 6 விவசாயிகளுக்கு 2014-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் கடன் தொகை 5 லட்சம் ரூபாயை உடனே செலுத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. விவசாயிகள் பதற்றத்துடன் வங்கியில் சென்று விசாரித்த பிறகுதான் மோசடி விவகாரம் வெளியே வந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வெளியநாடு ஊராட்சி உறுப்பினர் ரோஜோ ஜோசப்பை தேடி வருகிறோம்" என்றார்.