வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (20/06/2018)

கடைசி தொடர்பு:12:00 (20/06/2018)

`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...!'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா

``சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், `மலையின் அழகை ரசிக்க வாருங்கள்' '' எனச் சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தனியார் ஓட்டல் உரிமையாளர்கள். 

சிம்லா

இமாசல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவுக்கு, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், கைகளில் காலிக் குடங்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, சிம்லா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் கால் டாக்ஸி டிரைவர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் என அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வட இந்திய ரெஸ்ட்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கத்தினர், `அரசு எடுத்த நடவடிக்கையால், சிம்லாவில் தண்ணீர் பிரச்னை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இப்போது, சிம்லாவில் பருவநிலை மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் உள்ளது. இயற்கை அழகை ரசிக்க வாருங்கள்' என அழைப்பு விடுத்துள்ளனர்.