வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (20/06/2018)

கடைசி தொடர்பு:12:28 (20/06/2018)

200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், `தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் மருத்துவக் கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு சேவைகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், தமிழகத்தில் எந்தப் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதுரையில் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மதுரையில் உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு, அதிநவீன வசதியுடன் 750 படுக்கை அறைகள் அமைக்கப்படும். மேலும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்காக 100 இடங்கள் ஒதுக்கப்படும். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு. அவரின், கோரிக்கையை ஏற்றுத் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட மத்திய அரசுக்கு நன்றி. எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட மத்திய அரசுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்'' என்று கூறினார்.