`காலையில் தரிசனம்; இரவில் திருட்டு’ - 3 ஆண்டுகளாகப் போலீஸாருக்கு `டிமிக்கி' காட்டிய சிலை திருடன் | Story behind idol thief's survival for three years

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (20/06/2018)

கடைசி தொடர்பு:16:08 (20/06/2018)

`காலையில் தரிசனம்; இரவில் திருட்டு’ - 3 ஆண்டுகளாகப் போலீஸாருக்கு `டிமிக்கி' காட்டிய சிலை திருடன்

சிலைதிருடன்

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள மூன்று கோயில்களில் சிலைகளைத் திருடிய பிரபல சிலை திருடன் காவாங்கரை ஜெயக்குமாரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். 

கடந்த 2015 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில் சிவன், பார்வதி உலோகச் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாகச் சுங்குவார்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதையடுத்து, வந்தவாசி அருகில் உள்ள சௌந்தரியபுரம், ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று உலோகச் சிலைகள் கடந்த 2015 ம் ஆண்டில் திருட்டுப்போனது. தொடர்ந்து, வந்தவாசி அருகில் பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய நான்கு உலோக சாமி சிலைகள் கொள்ளைப் போயின. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாக வந்தவாசி வடக்கு போலீஸார் விசாரித்துவந்தனர். 

இந்த வழக்கு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸாரும் விசாரணை நடத்தினர். ஏற்கெனவே பெண் பத்திரிகை ஆசிரியர், டிப்ளோமா இன்ஜினீயர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியான சிலை திருடன் காவாங்கரை ஜெயக்குமாரையும் அவரின் கூட்டாளியான தனலிங்கத்தையும் போலீஸார் தேடி வந்தனர்.

மூன்று கோயில்களிலிருந்து திருடப்பட்ட எட்டு உலோக சாமி சிலைகளை கடந்த 14.5.2018 அன்று மேற்கு மாம்பலத்திலிருந்து பர்மாவுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு செல்லும் ரகசியத் தகவல் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்குக் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார், சிலைகளை கடத்திய தனலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த எட்டுச் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சிலை திருடன் காவாங்கரை ஜெயக்குமாரை போலீஸார் தேடி வந்தனர். அவர், சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பணம் வாங்க வரும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐஜியான பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் ஆய்வாளர்கள் ரவி விநாயமூர்த்தி ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஐ பழனிசாமி, காவலர்கள் சக்திவேல், கோபி, ஆனந்தகுமார் ஆகியோர் அங்குச் சென்றனர். பணம் வாங்க வந்த காவாங்கரை ஜெயக்குமாரை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

சிலை திருடன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காவாங்கரை ஜெயக்குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, சேலம் எனப் பல இடங்களில் பதுங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த இடம் குறித்த தகவல் கிடைத்து நாங்கள் செல்வதற்குள் தப்பி விட்டார். இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றங்களில் மனுவும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் ஜெயக்குமார், பணம் வாங்க வரும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அங்குச் சென்று அவரைப் பிடித்துள்ளோம். மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அவரைக் இன்றுதான் கைது செய்ய முடிந்தது.  ஜெயக்குமார் திருடிய சிலைகளை தனலிங்கம் என்பவரிடமிருந்தது. இவர், சினிமாத் துறையில் மேலாளராக இருந்தவர். 

ஜெயக்குமாரிடம் விசாரித்தபோது, சிலைகளை பர்மாவில் விற்க அவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும், பர்மாவுக்குச் செல்ல திட்டமிட்ட சமயத்தில்தான் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்தார்.  மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 80 கோடி ரூபாயாகும். ஜெயக்குமார்மீது நான்கு வழக்குகள் உள்ளன" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழகத்தில் உள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவாங்கரை ஜெயக்குமார், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பிறகு, கோயில் குறித்த விவரங்களை அங்குள்ளவர்களிடம் சேகரித்துள்ளார். அதன்பிறகுதான் சிலைகளைத் திருட திட்டமிட்டுள்ளார். பகலில் கோயிலை நோட்டமிட்ட அவர், இரவில் சிலைகளைத் திருட ஸ்கெட்ச் போட்டுள்ளார். டிப்ளோமா இன்ஜினீயர் ஒருவர்தான் கோயிலுக்குள் நுழைந்து சிலைகளைத் திருடியுள்ளார். அங்கிருந்து சிலைகளை எடுத்துச் செல்ல வசதியாக கோயிலின் அருகிலேயே காரை நிறுத்தியுள்ளனர். பிறகு அங்கிருந்து சிலையைச் சென்னைக்கு எடுத்துவந்துள்ளனர். அதற்கு பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தைத் தொடர்ந்து வந்தவாசியிலும் ஜெயக்குமார் மற்றும் அவரின் கும்பல் கைவரிசைக் காட்டியுள்ளது. ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்" என்றார்.