நில உச்ச வரம்புச் சட்டம் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கப்படும் விவசாய நிலங்கள்

நில உச்ச வரம்புச் சட்டம் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கப்படும் விவசாய நிலங்கள்

தமிழக அரசு நில உச்ச வரம்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கியுள்ளது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நில உடைமையாளர்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தாரர்களிடம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தது. ஒரு தனிக் குடும்பத்திடம் அதிக அளவில் நிலங்கள் குவிந்திருப்பதைக் கட்டுப்படுத்த 1958-ம் ஆண்டு இந்திய அரசு நில உச்ச வரம்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, ஒரு தனிநபர் அதிகபட்சமாக 15 ஏக்கர் நிலம்தான் வைத்திருக்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 15 ஏக்கர் நிலம் இருக்கலாம். அந்த வகையில் ஒரு குடும்பத்திடம் அதிகபட்சம் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என வரையறுக்கப்பட்டது. அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த நில உடைமையாளர்கள், தங்களுடைய நிலங்களை மருத்துவமனைகள், கல்லூரிகள், கோயில்கள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கு எழுதிவைத்தனர். இன்னும் பலர் அறக்கட்டளைகளை உருவாக்கி அதன் பேரில் தங்களது நிலங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். அதன்பிறகு, இந்தியாவில் நில உச்ச வரம்புச் சட்டம் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களது பெயரிலும், தங்களது குடும்பத்தினரின் பெயரிலும் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு நில உச்ச வரம்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. 

இதனையடுத்து, தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள பதிவேடுகள் மூலம் நிலங்களின் அளவைக் கணக்கிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திடம் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால், அதனை அரசு கையகப்படுத்தும். அறக்கட்டளை பெயரில் இருந்தால், அதன் செயல்பாடுகள், மக்கள் சேவை பயன்பாடுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். இதனால் அறக்கட்டளை என்ற பெயரிலும் நிலங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. இதனால், இப்பகுதிகளில் உள்ள பெருநில உடைமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். 

தமிழக அரசு நில உச்ச வரம்புச் சட்டம் குறித்து விமலநாதன்இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சுற்றி, இந்தியாவில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்து வருகிறார். இதற்குத் தேவையான நிலங்களைத் தாரை வார்க்கத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த ஆர்வத்துடன் ஆயத்தமாகி வருகிறார். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதால், இங்குள்ள நிலங்களை வேறொரு வடிவத்தில் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தமிழக அரசு தீவிரம் காட்டுகிறதோ என நாங்கள் சந்தேகிக்கிறோம். கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருசில குடும்பங்களிடம் ஏராளமான நிலங்கள் குவிந்திருக்கின்றன. இந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கைமாற்றி விடுவதற்காகத்தான் நில உச்ச வரம்புச் சட்டம் என்ற ஆயுதத்தைத் தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. 

இவற்றில் கார்ப்பரேட் கம்பெனிகள், பல நூறு ஏக்கரில் சிறப்பு வேளாண் மண்டலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கக்கூடும். தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி படிப்படியாக கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்குப் போகக்கூடிய அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நில உச்ச வரம்புச் சட்டம் என்ற பூதத்தைக் காட்டி, பெருநில உடைமையாளர்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ரசியமாகப் பேரம் பேசுவார்கள். `30 ஏக்கருக்கு மேல் உள்ள உங்களது குடும்ப நிலத்தை நாங்கள் சொல்லும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்துவிட்டால் உங்களது கைக்குப் பெரும் தொகையாவது கிடைக்கும். இல்லையென்றால், உங்களுக்கு எந்தப் பலனும் இல்லாமல் உங்களது நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும்' என நயவஞ்சகமாகப் பேசி நிலங்களை அபகரிப்பார்கள். தர மறுத்தால், இச்சட்டத்தைப் பயன்படுத்தி இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மிகவும் குறைவான விலையில் தாரை வார்ப்பார்கள். இந்த நிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளின் வேளாண் மண்டலங்கள் மட்டுமல்லாமல் அபாயகரமான தொழிற்சாலைகளும் வரக்கூடும். கையப்படுத்தப்படும் நிலங்கள், நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும் என யாரும் தப்புக்கணக்கு போட வேண்டாம். அதற்கு இம்மி அளவுகூட வாய்ப்பில்லை” என்றார் மிகத் தெளிவாக.

விவசாய நிலங்கள் பல வழிகளில் அழிக்கப்படுவது காலக்கொடுமை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!