வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (20/06/2018)

கடைசி தொடர்பு:15:34 (20/06/2018)

``ஏழை மக்களை சென்னைக்கு வெளியே அனுப்புவதுதான் வளர்ச்சியா?” - மேதா பட்கர்

நகர மேம்பாடு என்பது நகரத்தில் இருக்கும் ஏழைகளையும் முன்னேற்றுவதாக இருக்க வேண்டும். மாறாக அவர்களைத் தூக்கி வெளியே எறிவதாக இருக்கக் கூடாது. சென்னைக் குடிசைப்பகுதிகளை வெளியேற்றவில்லை சரியாகச் சொன்னால் அவர்களைப் பிடுங்கி எறிகிறார்கள். அவர்களது வாழ்க்கையிலிருந்து பிடுங்கி வேறொரு வாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள் - மேதா பட்கர்

``ஏழை மக்களை சென்னைக்கு வெளியே அனுப்புவதுதான் வளர்ச்சியா?” - மேதா பட்கர்

குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதை எதிர்த்து மக்களைத் திரட்டி `நர்மதா பச்சாவோ அந்தோலன்' அமைப்பின் மூலம் போராட்டம் நடத்தியவர் சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை தூத்துக்குடி சென்ற மேதா பட்கர் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மேதா பட்கர் சென்னைக் குடிசைப் பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் தற்போதையச் சூழலில் நடக்கும் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசினார். மேதா பட்கரின் தமிழக வருகையை மக்கள் இயக்கங்களுக்கான தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. 

சமூகச் செயற்பாட்டாளர் கீதா பேசும்பொழுது, ``சென்னையில் மட்டும் 1500 குடிசைப் பகுதிகள் அறிவிக்கப்பட்ட குடிசைப்பகுதிகள். அவற்றை அகற்றினால்கூட அருகிலேயே மாற்று இடங்கள் கொடுக்க வேண்டும். ஆனால், அரசு அதனைச் செய்வதில்லை. ஏழை மக்களுக்கான கொள்கையைக் கொண்டுவரத் தவறிவிட்டது. இப்போது கூட 1,00,000 வீடுகள் கட்டப்படப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். அந்த வீடுகள் எங்கோ ஒரு மூலையில் கட்டப்படுவதற்கு அது கட்டப்படாமலேயே இருக்கலாம். சென்னை மாநகர ஆற்றுச் சீரமைப்பு என்ற பெயரில் இதனைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளையெல்லாம் தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு " என்றார். 

சமூகச் செயற்பாட்டாளர் சுஜித் பேசியபோது, ``நான்கு தலைமுறைகளுக்கு மேல் அவர்கள் அந்தக் குடிசைப்பகுதிகளில் வசிக்கின்றனர். கூவம் ஆற்றைச் சுத்தம் செய்யும் திட்டத்தின் பெயரில் ஓர் ஆலோசனைக் குழுவை அமைக்கிறார்கள். அந்தக் குழுவின் அறிக்கையானது 14,657 குடும்பத்தில் 40% குடும்பம் அங்கேயே இருக்கலாம் எனக் கூறியிருக்கிறது. அவற்றையும் கண்டுகொள்ளாமல் மக்களைத் தொடர்ந்து காலி செய்து பல கிலோமீட்டர் தள்ளிக் கொண்டுபோய் குடியமர்த்துகின்றனர். பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி என அரசு கட்டியுள்ள குடியிருப்புகள் அனைத்துமே சதுப்பு நிலங்களில் அமைந்துள்ளன. சதுப்புநிலங்களில் எந்தவித கட்டடங்களும் கட்டக் கூடாது. ஆனால், இதையெல்லாம் அரசு கண்டுகொள்வதில்லை" என்றார். 

மேதா பட்கர்

மேதா பட்கர் பேசும்போது ``சென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் குடிசைப்பகுதிகளை குறிவைத்து அகற்றும் இந்தப் பணியை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் முதற்கொண்டு பலர் எதிர்த்தனர். இருந்தும் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை அகற்றும் பணி தொடர்ந்து அரசால் நடத்தப்பட்டு வருகிறது. நகரத்தை வளர்க்க உழைத்தவர்கள்தாம் குடிசைப் பகுதிகளில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் அங்கே வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தையே புறக்கணித்துள்ளார்கள். கடந்த வருடம் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்களை குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். இந்த வருடமும் எடப்பாடி பழனிசாமி அரசானது குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு எதிராக மிருகத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வாழுமிடத்தை விட்டுத் தவித்தது மட்டுமன்றி வாழ்வாதாரத்தையும் தொலைத்திருக்கிறார்கள். பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குக் கூட போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தாங்கள் வாழ்ந்த நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், வேலைக்குப் போகும் பெண்கள் தினம்தோறும் நகரத்துக்கு வந்துபோக முடியாமல் திணறுகின்றனர். இதனால் அவர்கள் வருமானம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி உடல்நலமும் அதிக பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு குடும்பத்தின் வாழ்வே சிதறடிக்கப்படுகிறது. நகரத்தை வளர்க்கும் திட்டமல்ல இது. நகரத்தை அழகாக்கி அதன் மூலம் காசாக்குவதற்கு, சமூகத்தின் அடிமட்ட நிலையில் இருப்போரைப் பலியாக்கும் திட்டம்தான் இது. இதைத்தான் எடப்பாடி பழனிசாமி அரசு செய்து வருகிறது. நகர மேம்பாடு என்பது நகரத்தில் இருக்கும் ஏழைகளையும் முன்னேற்றுவதாக இருக்க வேண்டும். மாறாக அவர்களைத் தூக்கி வெளியே எறிவதாக இருக்கக் கூடாது. சென்னைக் குடிசைப்பகுதிகளை வெளியேற்றவில்லை; அவர்களைப் பிடுங்கி எறிகிறார்கள். அவர்களது வாழ்க்கையிலிருந்து பிடுங்கி வேறொரு வாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள். நதிகளின் கரையோரத்தில் நீர்ப் போகும் பாதைக்கு இடைஞ்சலாக வழியில் உள்ள பெரிய பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அவர்கள் குறிக்கோள் முழுதும் குடிசைப் பகுதிகளை அகற்றவது மட்டுமே. 

மேதா பட்கர்

வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நகரத்தை வணிக காரணங்களுக்காக அழகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு தூத்துக்குடியே சிறந்த உதாரணம். தூத்துக்குடியில் நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவை ஒருசேர வளர்ந்து வருகிறது. இதன் விளைவு தூத்துக்குடியில் நிலம், நீர், மின்சாரம் ஆகியவை கிட்டத்தட்ட குத்தகைக்கு எடுக்கப்பட்டது போல கார்ப்பரேட் கைகளுக்குச் செல்கின்றன. இதே நிலைதான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நிகழ்கிறது. தமிழ்நாடு முழுக்கவே அரசு அதிகாரம் மக்களை ஒடுக்கி வருகிறது. அது சென்னைக் குடிசைவாழ் மக்களாக இருக்கலாம், மீனவர்களாக இருக்கலாம், ஸ்டெர்லைட் பிரச்னையாக இருக்கலாம். எல்லாவற்றிலும் அரசு அதிகாரம் மக்களை அழுத்துகிறது. மக்களுக்காகப் போராடக்கூடியவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் வேல்முருகன், மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ் மூவருக்கும் ஆதரவாகக் கேள்வி கேட்கிறோம். ஜனநாயக நாட்டில் இது பொறுக்கத்தக்கது அல்ல. எல்லாரும் இணைந்து போராட வேண்டும். எங்களின் தேசிய மக்கள் கூட்டு இயக்கத்தின் (National Alliance of People's Movement) நோக்கம் என்னவெனில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காமல் மக்கள் வாழ்வை மேம்படுத்துகிற ஒரு வளர்ச்சி மட்டுமே." என சென்னை குடிசை வெளியேற்றம் குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்தார் மேதா பட்கர். 

சமீபத்தில்தான் சென்னையின் சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில் இருக்கும் அஞ்சுக் குடிசை எனும் குடிசைப்பகுதியில் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. இதேபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களை அழகாக்கும் பெயரில் அதன் பூர்வகுடிகளை உழைக்கும் மக்களை வெளியேற்றுவதை நெடுங்காலமாகவே அரசு செய்து வருகிறது. மேதா பட்கர் போன்று பலரும் இந்திய அளவில் இந்தப் பிரச்னைக் குறித்து செயல்பட்டு வருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்