`அரசியல் சார்புள்ள சாக்கடை..!’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது. இது, உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.நா

 

`மெக்ஸிகோ எல்லையை சட்டவிரோதமாகக் கடக்கும் நபர்கள் கைதுசெய்யப்படுவர்’ என்ற ட்ரம்ப்பின் குடியேற்றச் சீர்திருத்த அறிவிப்பு, அமெரிக்காவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் உத்தரவின் பேரில் கைதுசெய்யப்படுபவர்களின் குழந்தைகள், அவர்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள்  வர  நுழையும் நபர்களைக் கைதுசெய்து, அவர்களின் குழந்தைகளை மட்டும் தனி இடத்தில் தங்கவைத்துள்ளது அமெரிக்க அரசு. இதனால், கடந்த 5 வாரங்களில் மட்டும் சுமார் 2,000 குழந்தைகள், அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகள், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளனர். இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. 

அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
 

இந்தக் சூழலில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா  அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. அமெரிக்காவின் ஐ.நா-வுக்கான தூதர் நிக்கி ஹாலே இந்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமின்றி, ஐ.நா அமைப்பைக் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்குறித்து ஹாலே பேசுகையில், ``ஐநா-வின் மனித உரிமைகள் ஆணையம், தொடர் மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர்,  ஆணையத்தின் உயர் பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். மனித உரிமைகளை மீறும் கூட்டங்கள் தப்பித்துக்கொண்டேவருகின்றன. அவற்றை ஐ.நா ஆணையம் அரசியல் போர்வையால் மூடி மறைக்கிறது. அரசியல் சார்புள்ள சாக்கடையாக  ஐ.நா மனித உரிமை ஆணையம் மாறிவிட்டது. எங்களுக்கு மனித உரிமைகளைக் கேலிக்கூத்தாகும் தற்சார்புள்ள போலித்தனமான ஆணையத்தின் உறுப்பினராக இருப்பதில் விருப்பமில்லை. எனவே, மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து விலகிக்கொள்கிறோம். ஆனால், ஒருபோதும் மனித உரிமைகளை மீறமாட்டோம்’ என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபை நிறைவேற்றும் தீர்மானங்களால் ஏற்பட்ட அதிருப்தியே, அமெரிக்காவின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் ஆதரித்துள்ளது.

அமெரிக்கா எடுத்த திடீர் முடிவின் பின்னணி..

ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடிவருகின்றன.  இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா ஏற்க மறுத்துவிட்டது. அவ்வாறு அறிவித்தால், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையே நடந்துவரும்  கலவரம் மேலும் தீவிரமாகும் என்று எச்சரித்தது. கடந்த மார்ச் மாதம் முதல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த மக்கள்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில், இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் ஜூன் 15-ம் தேதி கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  

இஸ்ரேல்
 

இந்தத் தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஐ.நா சபையில் கொந்தளித்தார். ``காஸா வன்முறைக்கு ஹமாஸ் இயக்கம்தான் காரணம். இஸ்ரேல் மீது பழிசுமத்துவதில் அரசியல் உள்ளது’ என்று பேசினார். தற்போது இந்தப் பிரச்னையின் தொடர்ச்சியாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பு, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றிலிருந்து ஏற்கெனவே அமெரிக்கா விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!