சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசினால் குற்றமா? - டெல்லியில் பொங்கிய கமல்ஹாசன்

''சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசினாலே குற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என டெல்லியில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், கடந்த பிப்ரவரி மதம் 21-ம் தேதி, மக்கள் நீதி  மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பின், தன் கட்சியின் பெயரிலேயே அனைத்து அரசியல் பணிகளையும் செய்துவந்தார்.  இந்நிலையில் இன்று, தன் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்வதற்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு, தேர்தல்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், “ இன்று தேர்தல் ஆணையத்தில் சாதாரண ஆலோசனை மட்டுமே நடைபெற்றது. அதிகாரிகள் அழைத்ததன் பேரில் மட்டுமே இன்று டெல்லி  வந்தேன். என்னிடம் சில கேள்விகள் கேட்டனர். விரைவில் எங்கள்  கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். சின்னம் பற்றி இன்னும் எந்த  முடிவும் எடுக்கப்படவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை  நடத்திய பின்னரே அது பற்றி முடிவு செய்யப்படும். டெல்லிக்கு நான்  வந்த வேலைகள் முடிந்த பின்னர், நேரம் இருந்தால் மட்டுமே  போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட மற்ற தலைவர்களைச்  சந்திப்பது பற்றி யோசிக்க முடியும். நான் சம்பளம் சரியாகத் தரவில்லை  எனக் கூறிய கெளதமி, பின்னர் நான் எல்லா பணத்தையும் அளித்த பிறகு அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவில்லை” எனக் கூறினார். 

 சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச் சாலை பற்றிய  செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கமல், “சுற்றுச்சூழல் பற்றி  பேசினாலே குற்றம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுகுறித்து அனைத்து மக்களுக்கும் கோபம் வருவது நியாயமானது. இதை நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!