வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (20/06/2018)

கடைசி தொடர்பு:16:15 (20/06/2018)

'செல்லதுரை நியமனம் செல்லாது' என்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

'மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டது செல்லாது' என்ற சென்னை  உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

உச்சநீதிமன்றம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் யாரும் நியமிக்கப்படாமல்  இருந்தது. அதன் பின்னர்,கடந்த மே 27-ம் தேதியன்று செல்லதுரை  நியமிக்கப்பட்டார். துணைவேந்தராக நியமிக்கப்படுபவர்கள், குறைந்தது 10 ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் , செல்லதுரைக்கு பேராசிரியர் பணி அனுபவம் இல்லை என குற்றம் சாட்டப்பட்டது. அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து  புகார்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும், பல்கலைக்கழகத்தில் அதிக முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்பட்டுவந்தது. 

இந்நிலையில், இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு நடைபெற்றுவந்தது.  விசாரணையின் முடிவில், காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கபட்டது செல்லாது என தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செல்லதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்லதுரை நியமிக்கப்பட்டது செல்லாது என்ற சென்னை  உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க  உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இது தொடர்பாக, தமிழக அரசும் மனுதாரரும் மூன்று  வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட  உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது